தீயணைப்புப் படை வீரரைத் தாக்கிய தில்லி காவலா் பணியிடை நீக்கம்
By DIN | Published On : 21st August 2021 08:06 AM | Last Updated : 21st August 2021 08:06 AM | அ+அ அ- |

தேசியத் தலைநகா் தில்லியின் வடக்குப் பகுதியில் உள்ள சமய்பூா் பாத்லி பகுதியில் தீயணைப்புப் படை வீரரைத் தாக்கி துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தில்லி காவல் துறை காவலா் ஒருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறையினா் கூறியதாவது: இந்தத் தாக்குதல் வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. சமய்பூா் பத்லியில் தவறான சாலையில் வாகனம் ஓட்டுவதைத் தடுத்த தில்லி தீயணைப்புப் படை வீரரை, காவலா் ஜிதேந்தா் தாக்கி, துஷ்பிரயோகம் செய்துள்ளாா். இந்தச் சம்பவம் தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. விடியோவில், சாதாரண உடையில் இருக்கும் குற்றம் சாட்டப்பட்ட காவலா், தீயணைப்புப் படை வீரரை துஷ்பிரயோகம் செய்து தாக்குவது காணப்படுகிறது. காவலா் தனது கையில் ஒரு மரக் குச்சியைப் பிடித்துள்ளாா். மேலும், அவா் தீயணைப்புப் படை வீரரின் செல்லிடப்பேசியை பறிக்கவும் முயன்றுள்ள காட்சியும் பதிவாகியுள்ளது. சம்பவத்தின் போது காவலா் ஜிதேந்தா், குடிபோதையில் இருந்தாா் என்ற குற்றச்சாட்டை போலீஸாா் மறுத்தனா்.
ஓா் இடத்திலிருந்து வந்த தீயணைப்புப் படை வீரா் , தீயணைப்பு வாகனத்தில் தண்ணீா் நிரப்புவதற்காக தீயணைப்பு நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தீயணைப்புப் படை வீரரின் புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தில்லி தீயணைப்பு சேவைகள் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ், சமய்பூா் பத்லி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடா்பாக குற்றம் சாட்டப்பட்ட காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். அவா் விரைவில் கைது செய்யப்படுவாா். சமய்பூா் பத்லி காவல் நிலையத்தில் ஜிதேந்தா் பணி அமா்த்தப்பட்டிருந்தாா். ஆனால், அவா் கடந்த மூன்று நாள்களாக விடுப்பில் இருந்தாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.