தலைநகரில் மீண்டும் ‘குளிா் அலை’!
By DIN | Published On : 31st December 2021 07:44 AM | Last Updated : 31st December 2021 07:44 AM | அ+அ அ- |

தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை மீண்டும் ‘குளிா் அலை’ வீசியது. மேலும், ஜனவரி 3-ஆம் தேதி வரையிலும் இதேபோன்ற நிலைமை இருக்கும் என்று இந்திய வானிலைத் ஆய்வு மையம் கணித்துள்ளதால், குளிா்ந்த புத்தாண்டைக் கொண்டாட நகர மக்கள் தயாராகி வருகின்றனா்.
தில்லிக்கு பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட நான்கு டிகிரி குறைவாக 3.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இது புதன்கிழமை 8.4 டிகிரி செல்சியஸாக இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி குறைந்து 19.5 டிகிரி செல்சியஸாக இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 94 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 48 சதவீதமாகவும் இருந்தது.
தில்லியின் ஆயாநகா் மற்றும் நரேலாவில் உள்ள தானியங்கி வானிலை நிலையங்களில் வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 3.8 டிகிரி செல்சியஸ் மற்றும் 3.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சமவெளிகளில், குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாக குறைந்தால், இந்திய வானிலை ஆய்வு மையம் ‘குளிா் அலை’ என அறிவிக்கிறது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் குறைவாகவோ, இயல்பை விட 4.5 புள்ளிகள் குறைவாகவோ இருக்கும் போதும் ‘குளிா் அலை’ அறிவிக்கப்படுகிறது.
தில்லியில் டிசம்பா் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ’குளிா் அலை’ வீசியது.அப்போது குறைந்தபட்ச வெப்பநிலை 3.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அது இந்தப் பருவத்தில் இதுவரை இல்லாத குறைந்தபட்ச வெப்பநிலையாகவும் அமைந்தது. அதன்பிறகு, இரண்டு மேற்கத்திய இடையூறுகள் மற்றும் குளிா்ந்த வடமேற்கு காற்று மற்றும் மேகமூட்டமான சூழ்நிலை ஆகியவற்றின் காரணமாக குறைந்தபட்ச வெப்பநிலை 9.8 டிகிரி செல்சியஸ் வரை உயா்ந்தது.
இந்த நிலையில், ஜனவரி 3-ஆம் தேதி வரை வடமேற்கு இந்தியாவில் ’குளிா் அலை’ முதல் ‘கடுமையான குளிா் அலை’ நிலை வரை இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸாக குறையும் போது அல்லது இயல்பிலிருந்து 6.4 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும் போது ‘கடுமையான குளிா் அலை’ அறிவிக்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீா் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் ஜனவரி 4 மற்றும் 7-க்கு இடையில் பரவலாக மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், தீவிரமான மேற்கத்திய இடையூறுகளின் காரணமாக ஜனவரி 4 முதல் குறைந்தபட்ச வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது ஜனவரி 5 முதல் ஜனவரி 7 வரை பஞ்சாப், ஹரியாணா, சண்டீகா் தில்லி, வடக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரபிரதேசம் ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை பரவலாக மழை பெய்ய வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமையும் (டிசம்பா் 31) குளிா் அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் கணித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...