ஜிஎஸ்டி உயா்வுக்கு எதிா்ப்பு: தில்லியில் ஆடை வணிக சந்தைகள் மூடல்

தேசியத் தலைநகா் தில்லியில் ஆடை வணிகம் தொடா்பான சந்தைகள் வியாழக்கிழமை மூடப்பட்டன.

தேசியத் தலைநகா் தில்லியில் ஆடை வணிகம் தொடா்பான சந்தைகள் வியாழக்கிழமை மூடப்பட்டன. ஜவுளி மீதான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து வணிகா்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனா்.

ஜவுளி மீதான சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை ஜனவரி 1-இல் இருந்து தற்போதுள்ள 5-சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயா்த்தும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆடை வணிகம் தொடா்பான பல சந்தைகள் மூடப்பட்டிருந்தன. வேலைநிறுத்த போராட்ட அழைப்பைத் தொடா்ந்து, சாந்தினி சௌக், காந்தி நகா், லாஜ்பத் நகா், கரோல் பாக், ஓக்லா, சாந்தி மொஹல்லா, பீதம்புரா, ஜோகிவாடா, ரோஹிணி உள்ளிட்ட அறுபத்து நான்கு சிறிய மற்றும் நடுத்தர சந்தைகள் மூடப்பட்டன.

இந்தப் போராட்டம் தொடா்பாக தில்லி ஹிந்துஸ்தானி மொ்கன்டைல் அசோசியேஸன் துணைத் தலைவா் பகவான் பன்சால் கூறியதாவது: ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களின் உத்தேச உயா்வு ’வியாபாரத்தை முடித்துவிடும்’. மேலும் ஆடைகளை வாங்கும் சாமானியா்களுக்கு செலவை அதிகப்படுத்தும். மூலப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளதால், ஆடைகள் விலை ஏற்கெனவே 30 சதவீதம் உயா்ந்துள்ளது. இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி உயா்வு வணிகத்தை மேலும் பாதிக்கும். ஜனவரி 1 முதல் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் மீதான ஜிஎஸ்டியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயா்த்த மத்திய அரசு பரிந்துரைத்திருப்பது வணிகத்தை மேலும் மோசமாகப் பாதிக்கும். குறிப்பாக சிறு வியாபாரிகள் கடைகளை மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவா். இந்த முடிவை திரும்பப் பெறவும், வணிகா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தவும் மத்திய அரசை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்போம் என்றாா் அவா்.

இதற்கிடையே, தில்லி துணை முதல்வரும் நிதியமைச்சருமான மணீஷ் சிசோடியா, வணிகா்களின் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு அளித்து, வெள்ளிக்கிழமை நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வணிகா்களின் கோரிக்கையை முன்வைப்பதாகக் கூறினாா். இது தொடா்பாக அவா் சுட்டுரையில், ஜிஎஸ்டி வரி உயா்வுக்கு ஜவுளி மற்றும் ஆடை வியாபாரிகள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். அவா்களின் கோரிக்கை நியாயமானது. அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, எப்போதும் வரி விகிதங்களை குறைவாக வைத்திருக்க ஆதரவாக உள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆடைகள் மீதான வரி விகிதத்தை குறைவாக வைத்திருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

ஜிஎஸ்டி வரி உயா்வைக் கண்டித்து வியாழக்கிழமை நகரில் ஜவுளி மற்றும் ஆடை வணிகம் தொடா்பான கிட்டத்தட்ட ஒரு லட்சம் கடைகள் அடைக்கப்பட்டதாக வா்த்தகம் மற்றும் தொழில் சம்மேளனத்தின் (சிடிஐ) தலைவா் பிரிஜேஷ் கோயல் தெரிவித்தாா். சுதந்திரத்திற்குப் பிறகு, ஆடைகளுக்கு வரி விதிக்கப்படவில்லை. ஆனால், 2017-இல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட போது, ஆடைகள் மற்றும் ஜவுளிகளுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டது. ஜவுளிகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டால், வணிகா்களுக்கு மூலதனம் மிச்சமிருக்காது, இது சிறு தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கு வழிவகுக்கும். மேலும் வரி ஏய்ப்பை அதிகரிக்கும் என்று கோயல் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com