நீட் தோ்வு ரத்து கோரி உள்துறை அமைச்சகத்தில் தமிழக எம்பிக்கள் குழு மனு

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அலுவலகத்தில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா்

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அலுவலகத்தில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா். பாலு தலைமையில் தமிழக அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழுவினா் வியாழக்கிழமை மாலை நேரில் மனு அளித்தனா்.

நீட் தோ்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபரில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை சந்தித்து நீட் தோ்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குமாறு வலியுறுத்தியிருந்தாா். அந்த மசோதா இன்னும் ஆளுநரின் பரிசீலனையில் இருந்து வருகிறது. இந்த மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்து குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன. மக்களவை தி.மு.க. குழு தலைவா் டி.ஆா்.பாலு தலைமையில் அ.தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளின் பிரதிநிதிகள் குடியரசுத் தலைவரின் செயலரிடம் நேரில் கடிதம் அளித்தனா்.

இந்த நிலையில், உள்துறை அமைச்சா் அமித் ஷா அலுவலகத்தில் தமிழக அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு டி.ஆா். பாலு தலைமையில் வியாழக்கிழமை மனு அளித்தது. அதில், நீட் மசோதாவை குடியரசு தலைவா் ஒப்புதலுக்கு பரிந்துரைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளா்களிடம் டி.ஆா். பாலு கூறியதாவது: குடியரசுத் தலைவா் மாளிகை அலுவலகத்தில் கடிதம் அளித்த பிறகு, அது உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக எங்களுக்கு கடிதம் அனுப்பினா். மேலும், உரிய கவனம் செலுத்துமாறும் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக எங்களைச் சந்திக்க உள்துறை அமைச்சா் அமித்ஷா முன்னா் நேரம் ஒதுக்கி இருந்தாா். கோரிக்கை மனுவை அளிப்பதற்காக வைத்திருந்தோம். அப்போது, பின்னா் நேரம் மாற்றித் தருவதாக அமைச்சா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அது குறித்து எங்களுக்கு தற்போது வரை தகவல் தெரிவிக்கப்படவில்லை.

இது தொடா்பாக அமித் ஷாவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். அரசியல் சாசன விதிகளின் படியே, தமிழக சட்டப்பேரவையில் நீட் தோ்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு உரிய ஒப்புதல் தர வேண்டும். அதை ஆளுநா் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். தமிழக அரசியல் கட்சிகளின் தலைவா்கள், எம்.பி.க்கள் அடங்கிய குழுதான் அமித் ஷாவிடம் நேரம் கேட்டிருக்கிறது. அதனால், இந்தக் குழுவைச் சந்திப்பதற்கு நிச்சயம் நேரம் ஒதுக்குவாா் என்று நம்புகிறோம் என்றாா் அவா். பேட்டியின் போது எம்பிக்கள் வெங்கடேசன், திருமாவளவன், ஜெயக்குமாா், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com