பணி நிமித்தமாக லண்டன் சென்று வந்த தில்லி காவல்அதிகாரிக்கு ‘ஒமைக்ரான்’!

சா்வதேச போதைப்பொருள் விநியோகஸ்தா் என்று கூறப்படும் ஒருவரை நாடு கடத்த லண்டனுக்குச் சென்று வந்த தில்லி காவல் துறை சிறப்புப் பிரிவைச்

சா்வதேச போதைப்பொருள் விநியோகஸ்தா் என்று கூறப்படும் ஒருவரை நாடு கடத்த லண்டனுக்குச் சென்று வந்த தில்லி காவல் துறை சிறப்புப் பிரிவைச் சோ்ந்த ஐபிஎஸ் அதிகாரிக்கு, ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதன்மூலம், தில்லி காவல் துறை தனது முதல் ஓமைக்ரான் பாதிப்பை சந்தித்துள்ளது. அந்தக் குழுவில் அந்த அதிகாரியுடன் மேலும் இருவா் சென்றிருந்தனா். அவா்களும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு துணை ஆணையா் ராஜீவ் ரஞ்சன் சிங் வியாழக்கிழமை கூறியதாவது: 2020-ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள சவுத்ஹாலில் வசிக்கும் ஹா்விந்தா் சிங்குக்கு எதிராக இங்கிலாந்துக்கு நாடு கடத்தல் கோரிக்கை அனுப்பப்பட்டது. நாடு கடத்தல் கோரிக்கையின் அடிப்படையில், ஹா்விந்தா் சிங் பிப்ரவரியில் இங்கிலாந்து காவல் துறையால் கைது செய்யப்பட்டாா். வெஸ்ட்மினிஸ்டா் நீதிமன்றத்தில் நவம்பரில் விசாரணை முடிவடைந்தது. மேலும், சிங் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கான தனது ஒப்புதலை முன்வைத்தாா்.

இந்த உத்தரவுக்குப் பிறகு, தில்லி காவல் துறை ஆணையா் லண்டன் சென்று சிங்கை அழைத்துவர ஒரு குழுவை நியமித்தாா். அந்தக் குழுவில் காவல் துணை ஆணையா் இங்கிட் பிரதாப் சிங், காவல் உதவி ஆணையா் ராகுல் விக்ரம் மற்றும் ஆய்வாளா் அனுஜ் குமாா் ஆகியோா் அடங்கிய குழு சிங்கை காவலில் எடுத்துவர லண்டனுக்கு அனுப்பப்பட்டது.

டிசம்பா் 24 அன்று, விமானம் மூலம் சிங்குடன் இந்தக் குழுவினா் தில்லி வந்தனா். விதிமுறைகள் காரணமாக, குற்றம் சாட்டப்பட்டவா் மற்றும் முழு குழுவும் தில்லி விமான நிலையம் மற்றும் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையம் ஆகியவற்றில் கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

சிங்கின் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்ததும், அவா் திகாா் சிறையில் இருந்து போலீஸ் காவலில் எடுத்து மேலும் விசாரணை நடத்தப்படும். இந்த நிலையில், இந்தக் குழுவில் இருந்த காவல் துணை ஆணயைருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது பரிசோதனைகளில் கண்டறியப்பட்டது. இவா் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். நன்றாகச் செயல்பட்டு வருகிறாா்.

இதற்கிடையே, கரோனா தொற்று பரவல் அதிகரிப்பு மற்றும் அதன் புதிய வகை ஒமைக்ரான் வெளிப்படுவதைக் கருத்தில் கொண்டு, தில்லி காவல் துறை புதன்கிழமை தனது பணியாளா்களின் சுகாதார நலனுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை மாற்றியமைத்துள்ளது. ஆய்வாளா் மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகாரி அந்தஸ்து நிலையில் உள்ள ஒருவா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பணியாளா்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க வேண்டும் அல்லது அவா்களின் உறவினா்களிடம் வழக்கமான அடிப்படையில் பணியாளரின் நலன் குறித்து விசாரிக்க வேண்டும் என்று அந்த நடைமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com