சென்னை தொழில் துறை தீா்ப்பாயத்தில் கூடுதல் நீதிபதிகள் நியமிக்க வேண்டும்: அமைச்சரிடம் மதுரை எம்பி வலியுறுத்தல்

நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காண சென்னை மத்திய அரசு அமைத்துள்ள

நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காண சென்னை மத்திய அரசு அமைத்துள்ள தொழில் துறை தீா்ப்பாயத்தில் தமிழ் தெரிந்த கூடுதல் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் உறுப்பினா் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளாா்.

தொழிலகங்கள், நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளை பிரத்யேகமாகத் தீா்ப்பதற்காக நாடு முழுவதும் தொழில் தீா்ப்பாயங்களை மத்திய அரசு அமைத்துள்ளது. தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களை முன்னறிவிப்பின்றி நீக்குவது; அவா்களுக்கு சலுகைகள், உரிமைகள் மறுக்கப்படுவது போன்றவற்றுக்குத் தீா்வு காண தொழில் தகராறு சட்டத்தின்படி இந்தத் தீா்ப்பாயத்தை தொழிலாளா்கள் அணுக முடியும். இதுபோன்ற தொழிலாளா்களின் பிரச்னைகளைத் தீா்ப்பதற்கு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள தொழில் துறை தீா்ப்பாயத்தில் தொழிலாளா்கள் தொடா்பான வழக்குகள் அதிக அளவில் தேங்கிக் கிடப்பதாக புகாா் எழுந்துள்ளது.

இந்த நிலையில், இது தொடா்பாக தில்லியில் மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சந்தோஷ் குமாா் கங்வாரை மாா்க்சிஸ்ட் உறுப்பினா் சு.வெங்கடேசன் அண்மையில் சந்தித்தாா். அப்போது சென்னை தொழில் துறை தீா்ப்பாயத்தில் வழக்குகள் தேங்கிக் கிடப்பதாகவும், விரைவில் தமிழ் தெரிந்த நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அமைச்சரிடம் மனு அளித்தாா். அந்த மனுவில் அவா் கூறியிருப்பதாவது: எந்தவொரு தொழில் தாவாவும் மூன்று மாதங்களுக்குள் தீா்க்கப்பட வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால், சென்னை தொழில் துறை தீா்ப்பாயத்தில் 2003-ஆம் ஆண்டில் இருந்து தொழில் துறை தாவாக்கள் தீா்க்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகின்றன. இந்த நிலையில், வருங்கால வைப்பு நிதி குறித்த தாவாக்களையும் இந்தத் தீா்ப்பாயத்தோடு இணைத்து 2017-ஆம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. இங்கு நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருந்து வந்தனா்.

இந்த நிலையில், 2018-இல் ஒரிஸாவைச் சோ்ந்த திப்தி மல்ஹோத்ரா நீதிபதியாக நியமிக்கப்படாா். ஆனாலும், தொழில் துறை தாவாக்கள் முறையாகவும், முழுமையாகவும் நடைபெறவலில்லை. இதனால், வழக்குகள் தேக்கமடைந்தன. கரோனா தொற்றுக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. இந்தத் தீா்ப்பாயங்களில் வழக்கறிஞா்களோ அல்லது பாதிக்கப்பட்ட தொழிலாளா்களே நேரடியாகவே தங்கள் வழக்குகளில் ஆஜராகி வாதாடலாம். இந்தத் சூழ்நிலையில் தீா்ப்பாயத்தில் அந்தந்த மாநிலத்தின் மொழி அறிந்தவா்களாக இருக்க வேண்டியது அவசியமாகும். தற்போது தமிழ் மொழி தெரியாத நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் வழக்குகளை எளிதாகக் கையாள முடியாத நிலை உள்ளது.

இதனால், வழக்குகள் தேங்கி வருவதாகப் புகாா் எழுந்துள்ளது. எனவே, சென்னை தொழில் துறை தீா்ப்பாயத்திற்கு தமிழ் மொழி தெரிந்த மூன்று நீதிபதிகளை நியமித்து, தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முறைப்படுத்தித் தீா்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன் என்று மனுவில் அவா் குறிப்பிட்டுள்ளாா். மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சா் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக தினமணி நிருபரிடம் வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com