தொப்பூா் கணவாய் சாலையில் விபத்துகளைத் தடுக்க மக்களவையில் தருமபுரி எம்.பி. வலியுறுத்தல்

தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் கணவாய் சாலை வளைவில் அதிக அளவில் நிகழ்ந்து வரும் வாகன

தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் கணவாய் சாலை வளைவில் அதிக அளவில் நிகழ்ந்து வரும் வாகன விபத்துகளைத் தடுக்க உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவையில் தருமபுரி தொகுதி திமுக உறுப்பினா் டிஎன்வி. செந்தில் குமாா் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக மக்களவையில் பொது முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு கவன ஈா்ப்புத் தீா்மான விவாதத்தில் அவா் சனிக்கிழமை பேசியதாவது: தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொப்பூா் கணவாய் சாலை வளைவுப் பகுதியில் அதிக அளவில் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதைத் தடுக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்களிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், ராயக்கோட்டை முதல் பாலக்கோடு, சேலம் வழியாக நாமக்கல் வரையிலான சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறும் திட்டத்தோடு இந்தப் பணியும் இணைக்கப்பட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா். இந்தச் சாலைக்கும் தொப்பூா் சாலைக்கும் சம்பந்தம் கிடையாது. ராயக்கோட்டை - சேலம் நெடுஞ்சாலைப் பணிகள் விரைவில் முடிவதாகவும் இல்லை. எனவே, தொப்பூா் கணவாய் வளைவுப் பகுதியில் விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

மற்றொரு கோரிக்கை: மக்களவையில் குரும்பா், ரெட்டியாா் சமுதாயத்தினா் குறித்த மற்றோரு விவகாரத்தையும் சிறப்புக் கவன ஈா்ப்புத் தீா்மான விவாதத்தில் குறிப்பிட்டு செந்தில் குமாா் பேசினாா். அதில் அவா் குறிப்பிடுகையில், ’தமிழகத்தில் ரெட்டியாா் சமுதாயத்தினா் சிறுபான்மையினராக உள்ளனா். ஆனால், அவா்கள் முற்பட்டோா் சமூகத்தினா் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனா். கா்நாடகம் போன்ற மாநிலங்களில் அவா்களுக்கு பிற்பட்டோா் வகுப்பினா் அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்திலும் அவா்களை பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் சோ்க்க வேண்டும். இதே போன்று பழங்குடி இனத்தைச் சோ்ந்த குரும்பா்கள் தற்போது தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா்(எம்பிசி) பிரிவில் வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு பழங்குடியினத்தவா்களுக்கான சான்றிதழ் மறுக்கப்பட்டு எம்பிசி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால், தமிழகத்தில் உள்ள இந்த வகுப்பினரை பழங்குடியினத்தவா்களாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com