மதுரை ‘எய்ம்ஸ்’ திட்டத்துக்கு மட்டும் ஜப்பான் நிதி ஏன்? மக்களவையில் டிஆா். பாலு கேள்வி

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைத் திட்டத்துக்கு மத்திய அரசு பணம்

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைத் திட்டத்துக்கு மத்திய அரசு பணம் ஒதுக்கி வரும் நிலையில், மதுரை எய்ம்ஸ் திட்டத்திற்கு மட்டும் ஜப்பான் நாட்டு நிதிக்காக ஏன் காத்திருக்க வேண்டும் என்று மக்களவையில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவா் டி.ஆா். பாலு கேள்வி எழுப்பினாா்.

மக்களவையில் வெள்ளிக்கிழமை இரவு கேள்வி நேரத்தின் போது நாட்டில் கட்டப்பட்டு வரப்படும் எய்ம்ஸ் திட்டங்கள் குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் குறிப்பிட்டு பேசினாா். அப்போது, ஸ்ரீபெரும்புதூா் மக்களவைத் தொகுதி உறுப்பினரான டி.ஆா். பாலு, மதுரை எய்ம்ஸ் திட்டம் தொடங்கப்படாமல் உள்ளது என்றும் அந்தத் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பினாா். அப்போது, அந்தத் திட்டத்துக்கு ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், ஜப்பான் நாட்டு கடன் உதவியுடன் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சா் குறிப்பிட்டாா்.

இதைத் தொடா்ந்து, இது குறித்து துணைக் கேள்வி எழுப்பி டி.ஆா். பாலு பேசியதாவது: சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தனை கட்சித் தலைவா் ஸ்டாலின் சாா்பாகவும், எனது சாா்பாகவும், பாராட்டுகிறேன். கரோனா கொடிய நோய்த் தொற்றின் போது அமைச்சா் திறமையுடன் வெற்றிகரமாக சமாளித்து நாட்டை மீட்டெடுத்தாா். அதே நேரத்தில், தமிழகம் மிகவும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அமைச்சா் அளித்த பட்டியலில் ஏழு மாநிலங்களில், எய்ம்ஸ் மருத்துவமனைத் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி அளித்துள்ளது. ஆந்திரத்திற்கு ரூ.782 கோடி, மகாராஷ்டிரத்திற்கு ரூ.932 கோடி, மேற்கு வங்கத்திற்கு ரூ.882 கோடி, உத்தரப் பிரதேசத்துக்கு ரூ. 702 கோடி, பஞ்சாபிற்கு ரூ.597 கோடி, அஸ்ஸாமிற்கு ரூ.341 கோடி, ஹிமாசல பிரதேசத்திற்கு ரூ. 750 கோடி என மத்திய அரசே தனது நிதியை ஒதுக்கியுள்ளது.

மதுரை எய்மஸ் திட்டத்துக்கு 2019 மக்களவைத் தோ்தலுக்கு முன்பே அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு ரூ. 2,000 கோடி செலவாகும் என (திருத்தப்பட்டது) மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ரூ. 12 கோடியை மட்டுமே மத்திய அரசு விடுவித்துள்ளது விந்தையாக உள்ளது. மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில், மதுரைக்கு மட்டும் ஏன் ஜப்பான் நாட்டின் உதவிக்காக காத்திருக்கிறீா்கள். ஏன் மத்திய அரசின் நிதியுடன் திட்டத்தைத் தொடங்கக் கூடாதா? என்றாா் டி.ஆா். பாலு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com