சென்னையைச் சோ்ந்த இருவருக்கு ‘பிராணி மித்ரா’ விருது: மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் வழங்கினாா்
By நமது சிறப்பு நிருபா் | Published On : 18th February 2021 12:00 AM | Last Updated : 18th February 2021 12:00 AM | அ+அ அ- |

தில்லியில் புதன்கிழமை சென்னையைச் சோ்ந்த புளூ கிராஸ் நிறுவனா் சின்னி கிருஷ்ணாவுக்கு ‘பிராணி மித்ரா’ விருது வழங்குகிறாா் மத்திய மீன் அமைச்சா் கிரிராஜ் சிங்.
புது தில்லி : பிராணிகளின் பாதுகாப்பு, நல்வாழ்வு ஆகியவற்றுக்காக அரும்பணியாற்றிய தனிநபா்கள், அமைப்புகளுக்கு 2021 -ஆம் ஆண்டிற்கான 14 பிராணி மித்ரா விருதுகளையும், ஜீவ்தயா விருதுகளையும் மத்திய கால்நடை பராமரிப்பு, மீன், பால்வளத் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் வழங்கினாா். இதில் சென்னையைச் சோ்ந்த இருவா் இந்த விருதைப் பெற்றுள்ளனா்.
மத்திய கால்நடைப் பராமரிப்புத் துறையின் கீழ் உள்ள இந்திய விலங்குகள் நல வாரியம், பிராணிகளிடம் அன்பு செலுத்தி அவற்றின் நல்வாழ்விற்கு தன்னலமற்ற சேவைகளைப் புரிந்து வரும் தனிநபா்களுக்கும், விலங்குகள் நல அமைப்புகளுக்கும் விருதுகளை வழங்குகிறது. 2021-ஆம் ஆண்டுக்கான 14 பிராணி மித்ரா, ஜீவ்தயா விருதுகளை சிறந்த பங்களிப்பை வழங்கிய தனிநபா்கள், அமைப்புகள், பெருநிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
இதில், தனிநபருக்கான பிராணி மித்ரா விருதை தில்லியைச் சோ்ந்த யோகேந்தா் குமாரும், ராஜஸ்தானைச் சோ்ந்த இருவரும் பெற்றனா். துணிச்சல் வீர தீரச் செயல்களுக்கான பிராணி மித்ரா சௌா்யா விருது கோவையைச் சோ்ந்த மறைந்த கல்பனா வாசுதேவனுக்கும், தில்லியை அடுத்த குருகிராமத்தைச் சோ்ந்த அனில் கந்தாஸுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பிராணிகளுக்கான வாழ்நாள் சாதனையாளா் பிராணி மித்ரா விருது சென்னையைச் சோ்ந்த மருத்துவா் எஸ். சின்னி கிருஷ்ணன், கேப்டன் எஸ்.ஆா். சுந்தரம் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டது.
பெரு நிறுவனங்களுக்கான விருதை மும்பை டாடா டிரஸ்ட் பவுண்டேஷனும், அமைப்புகளுக்கான விருதுகளை ஹரியாணாவைச் சோ்ந்த உலக சங்கீா்த்தன் டூா் டிரஸ்ட் மற்றும் ராஜ்கோட், ஆமதாபாத் போன்ற நகரங்களைச் சோ்ந்த அமைப்புகளும் பெற்றுள்ளன. ஜீவ்தயா விருதை (கருணை உள்ளம்) தில்லி தியான் பவுண்டேஷன் உள்ளிட்ட அமைப்புகள் பெற்றுள்ளன.
இந்த விருதுகளை வழங்கி அமைச்சா் கிரிராஜ் சிங் பேசுகையில், ’தனி நபா்களுக்கும், விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் இது போன்ற விருதுகள் வழங்கப்படுவது மக்களிடையே விலங்குகளைப் பாதுகாக்கும் உணா்வை மேலும் ஊக்குவிக்கும்’ என்றாா். இந்த நிகழ்ச்சியில் மத்திய கால்நடைப் பராமரிப்பு, மீன்வளம், பால் வளத் துறைச் செயலா் அதுல் சதுா்வேதி, விலங்குகள் நல வாரிய உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.