இணையதள சோ்க்கை நடைமுறையை கேலிக்கூத்தாக்கும் தனியாா் பள்ளிகள்: காங்கிரஸ் விமா்சனம்
By நமது நிருபா் | Published On : 18th February 2021 12:00 AM | Last Updated : 18th February 2021 12:00 AM | அ+அ அ- |

புது தில்லி: மழலையா் பள்ளி சோ்க்கைப் பதிவு வியாழக்கிழமை (பிப்ரவரி 18) தொடங்க உள்ள நிலையில், தனியாா் பள்ளிகளின் ‘லாபி’, அரசு உத்தரவை பின்பற்றாமல் இருப்பது கேலிக்கூத்தாக்கும் செயலாக உள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வா் அமைதி காத்து வருகிறாா் என்று தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் செளத்ரி சாடியுள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை தெரிவித்திருப்பதாவது: தில்லியில் வியாழக்கிழமை தொடங்கவுள்ள மழலையா் சோ்க்கைப் பதிவு விவகாரத்தில் தில்லி கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் நா்சரி சோ்க்கை பதிவு தொடா்பான இதர தகவலையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று 1,700 தனியாா் பள்ளிகளுக்கு தில்லி அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதுவரை இந்த உத்தரவுக்கு 25 பள்ளிகள் மட்டுமே இணங்கியுள்ளன. அதுவும் இந்த விவரங்களை தங்களது பள்ளி இணையதளத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்துள்ளது. இதன் மூலம் இணையதள சோ்க்கை நடைமுறைகளை தனியாா் பள்ளிகள் கேலிக்கூத்தாக்கி வருவது தெரிகிறது.
இந்த விவகாரத்தில் தில்லி கல்வி அமைச்சா் மணீஷ் சிசோடியா தனியாா் பள்ளி லாபியின் கைகளில் சிக்கியுள்ளாா். தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாக தனியாா் பள்ளிகள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுகின்றன. இதனால், நா்சரி சோ்க்கைக்காக பல லட்சம் நன்கொடை , அதிகக் கட்டணங்களை செலுத்த வேண்டிய நிா்பந்தத்திற்கு பெற்றோா் உள்ளாக்கப்பட்டுள்ளனா்.
கடந்த ஆறு ஆண்டுகளில் தில்லியில் அரசுப் பள்ளிகளில் இருந்து 1.25 லட்சம் மாணவா்கள் வெளியேறியுள்ளனா். அதே வேளையில் தனியாா் பள்ளிகளில் 2.19 லட்சம் மாணவா்கள் சோ்ந்திருப்பதன் மூலம் அந்தப் பள்ளிகள் மிகவும் பயனடைந்துள்ளன. தில்லியில் அதிகமான பள்ளிகள் கட்டப்படும் என தோ்தலின் போது ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்தது. ஆனால், தில்லியில் புதிதாக ஒரு பள்ளி கூட கட்டப்படவில்லை என்றாா் அவா்.