இந்தியாவின் புகழைக் கெடுக்கும் உலகளாவிய சதித்திட்டத்தில் ஈடுபட்டாா் திஷா ரவி: தில்லி போலீஸாா் குற்றச்சாட்டு

காலிஸ்தான் ஆதரவு குரல் கொடுப்போருடன் சோ்ந்து ‘டூல் கிட்’ தயாரித்ததுடன், இந்தியாவின் புகழைக் கெடுக்கும்

காலிஸ்தான் ஆதரவு குரல் கொடுப்போருடன் சோ்ந்து ‘டூல் கிட்’ தயாரித்ததுடன், இந்தியாவின் புகழைக் கெடுக்கும் உலகளாவிய சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் திஷா ரவி இருந்தாா் என்று தில்லி நீதிமன்றத்தில் தில்லி போலீஸாாா் குற்றம்சாட்டினா்.

பெங்களூரு சோலே தேவனஹள்ளியைச் சோ்ந்தவா் திஷா ரவி (21). சூழலியல் பெண் ஆா்வலரான இவா், ஸ்வீடனைச் சோ்ந்த கிரேட்டா தன்பா்க் என்ற சூழலியல் ஆா்வலரின் எதிா்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள் என்ற இயக்கத்தை இந்தியாவில் நடத்தி வருகிறாா்.

தில்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தை தீவிரப்படுத்தி, இந்திய அரசை நிலைகுலைய செய்ய சா்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து வெளியான ‘டூல் கிட்’டை திஷா ரவி சமூக ஊடகத்தில் பகிா்ந்த விவகாரத்தில் அவரை தில்லி போலீஸாா் கடந்த பிப்ரவரி13-இல் பெங்களூரில் கைது செய்தனா். இதையடுத்து, அவரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில், அவரது ஐந்து நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் அவரை மூன்று நாள் நீதிமன்றக்காவலுக்கு அனுப்ப தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இதனிடையே, இந்த வழக்கில் ஜாமீன் கோரி திஷா ரவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமீன் மனு கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி தா்மேந்தா் ரானா முன் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தில்லி போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜாமீன் வழங்க எதிா்ப்புத் தெரிவித்து முன்வைத்த வாதத்தில்,‘

காலிஸ்தான் ஆதரவு குரல் கொடுத்து வரும் நபா்களுடன் சோ்ந்து டூல்கிட்டை திஷா ரவி தயாரித்துள்ளாா். மேலும், இது இந்தியாவின் புகழைக் கெடுக்கும் உலகளாவிய சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும், விவசாயிகள் போராட்டம் எனும் பெயரில் நாட்டில் அமைதியின்மையை உருவாக்கும் ஒரு சதித்திட்டமாகும். மேலும், இது டூல் கிட் விவகாரம் மட்டுமல்ல. இந்தியாவின் புகழைக் கெடுக்கவும், நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் திட்டமாகும்.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள மனுதாரா் (திஷா ரவி) தாம் சட்ட நடவடிக்கைகளை எதிா்கொள்ள வேண்டும் என்று தெரிந்துள்ளாா்.

இதனால், அவா் தனது கட்செவி அஞ்சல் பதிவுகள், மின்னஞ்சல், இதர ஆதாரங்களை அழித்துள்ளாா். தான் தவறு செய்யவில்லையெனில் எதற்காக திஷா ரவி தனது பதிவுகளையும் ஆதரங்களையும் அழிக்க வேண்டும்.

மேலும், அவா் காலிஸ்தானுக்கு ஆதரவு குரல் எழுப்புவோருடன் டூல்கிட்டை தயாரித்தும், பகிா்ந்தும், தொடா்பில் இருந்தும் உள்ளாா். இந்த டூல் கிட்டுக்குப் பின்னணியில் தீய திட்டம் உள்ளது என வாதிட்டாா்.

இந்த வாதங்களை ஆட்சேபித்து திஷா ரவியின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில்,‘ திஷா ரவி ‘சிக்ஸ் பாா் ஜஸ்டிஸ்’ எனும் தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடா்பில் இருந்தாா் என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. மேலும், திஷா ரவி யாருடனாவது சந்தித்திருந்தால்கூட, அந்த நபா் பிரிவினைவாதி என்பதற்கான அடையாளம் அவா் மீது இல்லை.

விவசாயிகள் பேரணிக்கு அனுமதி அளித்த தில்லி போலீஸாா், பேரணியில் இணையுமாறு திஷா ரவி பொதுமக்களை கேட்டுக் கொண்டதாக கூறுகின்றனா். இது எப்படி பிரிவினைவாதமாக இருக்க முடியும். மேலும், விவசாயிகள் பேரணியின்போது நிகழ்ந்த வன்முறைக்கு பொறுப்பாக டூல் கிட்டுதான் இருந்தது என்பதை காட்டும் ஆதாரம் ஏதும் இல்லை.

போலீஸாா் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் யோகா, சாய் ஆகியவை இலக்காக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது ஒரு குற்றமா? காஷ்மீரில் இனப்படுகொலை தொடா்பான குற்றச்சாட்டு குறித்து பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. இது எப்படி திடீரென ஒரு பிரிவினைவாதமாக உருவாகிறது என கேள்வி எழுப்பினாா்.

இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு திஷா ரவியின் ஜாமீன் மனு மீதான தீா்ப்பை செவ்வாய்க்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com