பணம் மோசடி வழக்கில் பெண்ணுக்கு ஜாமீன்
By நமது நிருபா் | Published On : 20th February 2021 11:42 PM | Last Updated : 20th February 2021 11:42 PM | அ+அ அ- |

கரோனா நெருக்கடியின்போது அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல நபா்களை ஏமாற்றியதாக கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை ஜாமீன் வழங்கியது.
இந்த ஜாமீன் கோரும் மனுவை விசாரித்த பெருநகர மாஜிஸ்திரேட் தீபாலி ஸ்ரீவாஸ்தவா, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வெஷாகா குலாட்டிக்கு ரூ.25 ஆயிரம் ஜாமீன் தொகையுடன் அதே தொகைக்கு ஜாமீன் உத்தரவாதம் அளிப்பதன் பேரில் ஜாமீன் வழங்கினாா்.
இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்துள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டதாகக் கூறப்படும் நபரிடமிருந்து வழக்கு தொடா்புடைய ஆவணங்கள் மற்றும் கணக்குகள் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறி நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.
முன்னதாக விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்ட குலாட்டி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அகில் ரெக்ஸ்வால், ‘கடந்த ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதியில் இருந்து குலாட்டி நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறாா்.
அவா் தொடா்புடைய வழக்கில் விசாரணை முடிந்துவிட்டது. அவருடைய தந்தை நோயால் அவதியுற்று வருவதால், அவரைக் கவனித்துக்கொள்ள ஜாமீன் அளிக்க வேண்டும் என்று வாதிட்டாா்.
கரோனா தொற்றுநோய் காரணமாக, அரசாங்கம் புதிய திறந்தவெளி ஆள்சோ்ப்பை நடத்தவில்லை என்றும், தில்லி அரசு தன்னை வேலைக்கு ஆள்சோ்ப்பு செய்ய அங்கீகாரம் அளித்ததாகவும் கூறி பலரிடம் பணம் பெற்று குலாட்டி மோசடி செய்ததாக போலீஸாா் குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருந்தனா். மேலும், புகாா் அளித்த ஒவ்வொருவரிடமிருந்து குலாட்டி ரூ .13,000 பெற்ாகவும், போலி மற்றும் புனையப்பட்ட கடிதங்கள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கியதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.