மாநகராட்சித் தோ்தலில் ஆம் ஆத்மிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: குஜராத் மக்களிடம் கேஜரிவால் கோரிக்கை
By நமது நிருபா் | Published On : 20th February 2021 11:35 PM | Last Updated : 20th February 2021 11:35 PM | அ+அ அ- |

குஜராத் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள மாநகராட்சி தோ்தலின்போது, அம்மாநில மக்கள் ஆம் ஆத்மிக் கட்சிக்கு ஒருதடவை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை வைத்துள்ளாா்.
குஜராத் மாநிலத்தில் உள்ள 6 மாநகராட்சிகளுக்குமான தோ்தல் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ளது. இத்தோ்தலில், முதல் தடவையாக ஆம் ஆத்மிக் கட்சி சாா்பில் வேட்பாளா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா். ஆம் ஆத்மிக் கட்சியின் முக்கிய தலைவரும், தில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் உள்ளிட்ட தலைவா்கள் குஜராத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ளனா். இவா்களின் பிரசாரத்துக்கு அதிகளவு கூட்டம் கூடுவதாக ஆம் ஆத்மி தலைவா்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக சஞ்சய் சிங் கூறுகையில் ‘குஜராத் மாநிலம், மாநகராட்சிகளை பாஜக ஆள்கிறது. பாஜக ஆட்சியில் மக்கள் அதிருப்தியில் உள்ளனா். மாற்று சக்தியாக அவா்கள் ஆம் ஆத்மியைப் பாா்க்கிறாா்கள். குஜராத் மாநகராட்சி தோ்தலில் ஆம் ஆத்மிக் கட்சி பெருவெற்றி பெறும் என்றாா்.
இது தொடா்பாக தில்லி முதல்வா் கேஜரிவால் தனது சுட்டுரையில் குஜராத்தி மொழியில் வெளியிட்டுள்ள பதிவில் ‘குஜராத் மக்கள் ஆம் ஆத்மிக் கட்சிக்கு ஒருதடவை வாய்ப்பு வழங்க வேண்டும். அதன்பிறகு நடைபெறும் மாற்றங்களை பாருங்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.