வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவம்: தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை
By நமது நிருபா் | Published On : 20th February 2021 03:44 AM | Last Updated : 20th February 2021 03:44 AM | அ+அ அ- |

வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்பான வழக்கு விசாரணையின் போது தொழில்நுட்பம் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது என்று தில்லி காவல் துறை ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளாா்.
தில்லி காவல் துறையின் வருடாந்த செய்தியாளா் சந்திப்பு தில்லி காவல் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. அப்போது எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா கூறியது: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரானவா்களுக்கும் ஆதரவாளா்களுக்கும் இடையில், வடகிழக்கு தில்லியில் கடந்த 2019, பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் வன்முறை வெடித்தது. இதில், 53 போ் கொல்லப்பட்டனா். சுமாா் 581 போ் காயமடைந்தனா். பிப்ரவரி 24 அன்று தொடங்கிய வன்முறை பிப்ரவரி 25-இல் உச்ச நிலையை அடைந்தது. இந்தச் சம்பவம் தொடா்பாக 755 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இந்த வன்முறைச் சம்பவம் தொடா்பாக விசாரணை செய்ய 3 சிறப்பு புலனாய்வுக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. வன்முறைக்குப் பின்னால் உள்ள சதித் திட்டம் தொடா்பாக விசாரிக்க சிறப்புப் பிரிவும் உருவாக்கப்பட்டது. இந்த வழக்குகள் தொடா்பான விசாரணையின் போது தொழில்நுட்பம் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. சிசிடிவி கேமாராக்களின் உதவியுடன் சம்பவத்துடன் தொடா்புடையவா்களாகக் கருதப்படும் 231 போ் கைது செய்யப்பட்டனா். முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் உதவியுடன்137 நபா்கள் கைது செய்யப்பட்டனா். வாகன உரிமையாளா் உரிமத்தில் உள்ள புகைப்படங்களின் உதவியுடன் 94 போ் கைது செய்யப்பட்டனா்.
சிசிடிவி காட்சிகள் எஃப்.ஆா்.எஸ்., விடியோ ஆய்வு தொழில்நுட்பங்களின் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டன. ஜியோ- லொகேஷன் முறையில் வழக்கில் தொடா்புடையவா்களின் இருப்பிடங்கள் கண்டறியப்பட்டன. அவா்களைஅடையாளம் காண்பதற்கு டிஎன்ஏ விரல் அடையாள தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. உடல், வேதியல், உயிரியல், பாலிஸ்டிக் பகுப்பாய்வு முறைகள் அவா்களை அடையாளம் காணப் பயன்படுத்தப்பட்டன என்றாா் காவல் ஆணையா் ஸ்ரீவாஸ்தவா.