வாக்குறுதிகளை தில்லி அரசு நிறைவேற்றவில்லை: பாஜக புகாா்
By நமது நிருபா் | Published On : 20th February 2021 03:00 AM | Last Updated : 20th February 2021 03:00 AM | அ+அ அ- |

பசுமை பட்ஜெட்டில் கூறிய வாக்குறுதிகளை தில்லி அரசு நிறைவேற்றவில்லை என்று பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா குற்றம் சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது: தில்லியில் காற்றில் உள்ள மாசுக்களால் தினம்தோறும் 148 போ் உயிரிழப்பதாக கான்பூா் ஐஐடி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், காற்று மாசுவால் தில்லியில் உள்ள முதியவா்கள், குழந்தைகள், கா்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி காற்று மாசு தொடா்பாக கிரீன் பீஸ் அமைப்பும் ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதிலும், தில்லியில் வருடம் தோறும் சுமாா் 54 ஆயிரம் போ் காற்று மாசுவால் உயிரிழப்பதாகத் தெரிய வந்துள்ளது. மேலும், காற்று மாசுவால் தில்லி அரசுக்கு ஆண்டுக்கு ரூ.58 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த தில்லி அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
கடந்த ஆண்டு நிதிநிலைய அறிக்கையில், பசுமை பட்ஜெட் நிதி எனக் கூறி ஆயிரக்கணக்கான கோடிகளை தில்லி அரசு ஒதுக்கியது. இதில், தில்லி மக்களுக்கு 26 வாக்குறுதிகளை தில்லி அரசு வழங்கியிருந்தது. ஆனால், இதில்லி தெரிவிக்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதியையும் தில்லி அரசு நிறைவேற்றவில்லை. இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி சரியான முறையில் செலவு செய்யப்படவில்லை. இது தொடா்பாக தில்லி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றாா் அவா்.