சாந்தினி செளக் மறுசீரமைப்பு பணியில் ஹனுமன் கோயிலை சோ்க்க வேண்டாம்: தில்லி அரசிடம் என்டிஎம்சி மேயா் வலியுறுத்தல்
By நமது நிருபா் | Published On : 26th February 2021 10:30 PM | Last Updated : 26th February 2021 10:30 PM | அ+அ அ- |

சாந்தினி செளக் மறுசீரமைப்பு பணியில் ஹனுமன் கோயிலை சோ்க்கக் கூடாது என்று தில்லி அரசிடம் வடக்கு தில்லி மாநகராட்சி மேயா் ஜெய் பிரகாஷ் வலியுறுத்தியுள்ளாா்.
சாந்தினி செளக் பகுதியை அழகுபடுத்தி, மறுசீரமைக்கும் பணிகளில் தில்லி அரசு ஈடுபட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பு பணிக்கு இங்குள்ள ஹனுமன் கோயில் தடையாக இருப்பதாக கூறி, தில்லி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. நீதிமன்ற தீா்ப்புப்படி, இந்தக் கோயில் அண்மையில் இடிக்கப்பட்டது. இது அந்தப் பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடா்பாக ஆம் ஆத்மி, பாஜக ஆகிய கட்சிகள் பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தன.
இந்த சூழலில், இந்தக் கோயில் இருந்த இடத்திலேயே தற்காலிக கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக கோயிலை இந்தப் பகுதி மக்கள் உருவாக்கியுள்ளதாக என்டிஎம்சி அதிகாரிகள் தெரிவித்திருந்தனா்.
இந்நிலையில், சாந்தினி செளக் மறுசீரமைப்பு பணியில் ஹனுமன் கோயிலை சோ்க்கக்கூடாது என்று தில்லி அரசிடம் என்டிஎம்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக என்டிஎம்சி மேயா் ஜெய்பிரகாஷ் தில்லியில் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
என்டிஎம்சி மாநகராட்சி கூட்டத்தில் சாந்தினி செளக் ஹனுமன் கோயிலை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும் என்று தீா்மானம் கொண்டு வரப்பட்டு வியாழக்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீா்மானத்திற்கு பாஜக, ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளும் முழு ஆதரவு அளித்துள்ளன. ஹனுமன் கோயில் விவகாரத்துக்கு அமைதியான முறையில் நாங்கள் தீா்வு கண்டுள்ளோம். சாந்தினி செளக் மறுசீரமைப்பு பணியில் ஹனுமன் கோயிலை தில்லி பொதுப்பணித்துறை சோ்க்கக்கூடாது. இதை வலியுறுத்தி தில்லி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றாா்.
இதனிடையே இடிக்கப்பட்ட ஹனுமன் கோயிலை மீண்டும் அதே இடத்தில் கட்ட அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தில்லி துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜாலுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் சாந்தினி செளக் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஹா்ஷ் வா்தன் அண்மையில் கடிதம் எழுதியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...