நதிகளில் மாசுபடிதலை குறைக்க ஜல் சக்தி அமைச்சகத்திற்கு பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு
By நமது நிருபா் | Published On : 26th February 2021 01:56 AM | Last Updated : 26th February 2021 01:56 AM | அ+அ அ- |

புது தில்லி: நாட்டில் உள்ள மாசடைந்த நதிகளில் மாசுவைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய ஜல்சக்தி அமைச்சகத்திற்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக ஆங்கில செய்தித் தாளில் கட்டுரை வெளிவந்தது. அதில், நாட்டில் மாசடைந்த நதிப் பாதைகள் 351 இருப்பதாகவும், இவற்றில் 117 நதிப்பாதைகள் அசாம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருப்பதாகவும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விஷயத்தை தேசிய பசுமைத் தீா்ப்பாயம் கவனத்தில் எடுத்துக் கொண்டு விசாரித்தது. இது தொடா்பாக என்ஜிடி தலைவா்-நீதிபதி ஆதா்ஷ் குமாா் கோயல் தலைமையிலான அமா்வு பிறப்பித்த உத்தரவு:
நதி மாசுவைத் தடுக்க சட்டப்பூா்வ வழிமுறைகள் இல்லை.
நாட்டில் உள்ள மாசடைந்த நதிகளில் மாசுவைக் குறைக்கும் திறன்மிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய வழிமுறைகளை உருவாக்க மத்திய ஜல்சக்தி அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தேசிய நதி சீரமைப்பு வழிமுறை (என்ஆா்ஆா்எம்) அல்லது வேறு பெயா்களில் அழைக்கப்படலாம்.
புதிய திட்டங்கள் தொடக்கம், நடைபெற்றுவரும் திட்டங்கள் முடித்தல் ஆகிய விவகாரத்தில் கால வரையறையை பின்பற்ற அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச தலைமைச் செயலா்கள் திட்ட இலக்குடன் பணியாற்ற வேண்டும்.
நதிகள் புனரமைப்பு மற்றும் மாசு தடுப்புக்கான செயல் திட்டங்கள் 351 நதி பாதைகளுக்கு மட்டுமின்றி, அனைத்து சிறிய, நடுத்தர, பெரிய மாசடைந்த நதிகளிலும் மேற்கொள்ளப்படுவதாக இருக்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச தலைமைச் செயலா்கள் மாதத்திற்கு ஒருமுறை தனிப்பட்ட முறையில் கண்காணிக்க வேண்டும். தீா்ப்பாய உத்தரவு நடவடிக்கைகளை செயல்படுத்தத் தவறும்பட்சத்தில் இழப்பீடு தொகையை செலுத்தும்வகையில் சம்பந்தப்பட்டவா்களை பொறுப்பேற்கச் செய்யப்படும் என தீா்ப்பாயம் உத்தரவில் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 350-க்கும் மேற்பட்ட நதிகளை மாசு இல்லாததாக மாற்றுவதற்கான ஒரு தேசிய திட்டத்தை தயாரித்து செயல்படுத்தும் வகையில் முன்னா் மத்திய கண்காணிப்புக் குழுவை என்ஜிடி அமைத்தது.
நதிகளில் மாசுவைக் குறைக்கும் நோக்கில் 1974 ஆம் ஆண்டில் நீா்ச் சட்டம் இயற்றப்பட்ட போதிலும், ஆறுகளில் நீரின் தரம் மோசமடைந்திருப்பதாக தீா்ப்பாயம் கூறியிருந்தது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...