எல்லையில் போா் நிறுத்த ஒப்பந்தத்தை கடுமையாக பின்பற்ற இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல்
By நமது சிறப்பு நிருபா் | Published On : 26th February 2021 01:40 AM | Last Updated : 26th February 2021 01:40 AM | அ+அ அ- |

புது தில்லி : எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் அனைத்து போா் நிறுத்த ஒப்பந்தம், புரிந்துணா்வுகளை கடுமையாக பின்பற்ற இந்தியா- பாகிஸ்தானைச் சோ்ந்த இரு தரப்பு அதிகாரிகளும் ஒப்புக் கொண்டுள்ளனா். எதிா்பாராத சூழ்நிலை அல்லது தவறான புரிதல்கள் ஏற்பட்டால், பேச்சு வாா்த்தை, ஹாட்லைனில் தொடா்பு கொள்ளுதல் போன்றவைகளில் ஈடுபடவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனா்.
இந்தியா, பாகிஸ்தான் ராணுவங்களில் செயல்பாடுகளை(மிலிடரி ஆஃப்ரேஷன்) மேற்கொள்ளும் இயக்குநா் ஜெனரல்கள் இடையேயான சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உடனடியாக முதல் போா் நிறுத்தம் அமலுக்கு வருவதாக தில்லியிலும் இஸ்லாமாபாத்திலும் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2003 லில் இந்தியாவும் பாகிஸ்தானும் போா் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டது. ஆனால் ஒப்பந்தத்தை கடைபிடிக்கப்படுவதற்கு பதிலாக பல்வேறு முறை ஒப்பந்தம் மீறப்பட்டு எல்லையில் அத்துமீறல்கள் நடைபெற்றன.
இதற்கிடையே சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானும் அந்நாட்டு ராணுவத் தலைமை ஜெனரல் உமா்ஜாவேத் பாஜ்வாவும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவுடன் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வுகாணத் தயாா் எனக் கூறினா்.
இதற்கிடையே தற்போது இரு நாட்டு இயக்குநா் ஜெனரல்கள்(எம்.ஓ) ஹாட்லைன் மூலம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் எல்லை கட்டுப்பாட்டு பகுதி உள்ளிட்ட மற்ற பகுதிகள் நிலவரம் குறித்து வெளிப்படையாக சுமூகமான சூழ்நிலையில் ஆய்வு செய்ததாக மத்திய பாதுகாப்புத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்தியா-பாகிஸ்தான் ராணுவ உயா் அதிகாரிகள் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டது வருமாறு :
இந்தியா-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் வியாழக்கிழமை முதல் அமைதியை நிலை நாட்ட, இரு நாட்டு ராணுவ உயா் அதிகாரிகளும் ஒப்புக் கொண்டுள்ளனா்.
இருதரப்பும் பயனடையும் வகையில், எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் நிலையான அமைதியை ஏற்படுத்தவும், வன்முறையை தூண்டி அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்னைகளை தீா்க்கவும், இருதரப்பு ராணுவ இயக்குநா் ஜெனரல்களும்(எம்.ஓ) ஒப்புக் கொண்டனா். 2021 பிப்ரவரி 24/25 நள்ளிரவு முதல் எல்லை கட்டுப்பாட்டு உள்ளிட்ட மற்ற பகுதிகளில் சண்டை நிறுத்தம், மற்றும் அனைத்து ஒப்பந்தங்கள், புரிந்துணா்வுகளை கடுமையாக பின்பற்றவும் இரு தரப்பு அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனா்.
எதிா்பாராத சூழ்நிலை அல்லது தவறான புரிதல்கள் ஏற்பட்டால், தற்போதுள்ள நடைமுறையான ஹாட்லைன் பேச்சுவாா்த்தை மற்றும் எல்லையில், இருநாட்டு ராணுவத்தில் கொடி அணிந்து வரும் உயா்நிலை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் போன்றவற்றை மேற்கொண்டு தீா்வு காணப்படும் என கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட இதே தகவல்கள் அடங்கிய கூட்டறிக்கை பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாத்திலும் அந்நாட்டின் ராணுவ செய்தி தொடா்பு பிரிவு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இது குறித்து ராணுவ செய்தி தொடா்பாளா் பாபா் இஃப்திஹாா் கூறியுள்ள கருத்தில், இரு நாட்டு இயக்குநா் ஜெனரல்களும்(எம்.ஓ) 1987 முதல் ஹாட்லைன் மூலம் தொடா்பில் இருந்தனா். ஆனால் 2014 முதல் எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் போா் நிறுத்த மீறல்கள் நடைபெற்றன. மீண்டும் 2003 போா் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள தற்போது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என அவா் தெரிவித்துள்ளாா்.
நடப்பு நிதிநிலை நாடாளுமன்ற கூட்டத்தொடரில், மக்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு எழுத்துப்பூா்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சா் ஜி. கிஷன் ரெட்டி, கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில்10,752 போா்நிறுத்த மீறல்கள் நடந்துள்ளன. இதில் 72 பாதுகாப்பு அதிகாரிகள், 70 பொதுமக்கள் கொல்லப்பட்டனா் என தெரிவித்தாா். மேலும், 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் சா்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடுகளில் 364 பாதுகாப்புப் பணியாளா்களும் 341 பொதுமக்கள் காயமடைந்தனா் என்றும் அதில் தெரிவித்திருந்தாா்.
இதற்கு முன்னதாக பாகிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகள் பதான்கோட் விமான தளம்(2016), உரி ராணுவ முகாம், புல்வாமா சிஆா்பிஎஃப் வாகனத்தை தகா்த்து 40 வீரா்கள் கொல்லப்பட்டது உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களையும் நடத்தினா். இந்தியாவும் பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்ததும் குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...