ஜாமியா மிலியா ரயில் நிலையத்தில் இ-ரிக்ஷா வசதி தொடக்கம்
By நமது நிருபா் | Published On : 26th February 2021 01:43 AM | Last Updated : 26th February 2021 01:43 AM | அ+அ அ- |

புது தில்லி: ஜாமியா மிலியா இஸ்லாமியா மெட்ரோ ரயில் நிலையத்தில் இ-ரிக்ஷா வசதி வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வசதியை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் மங்கு சிங் தொடங்கிவைத்தாா்.
இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறுகையில், ‘ 25 இ-ரிக்ஷாக்கள் இந்த ரயில் நிலையத்தில் இருந்து தினமும் காலை 6 மணியில் இருந்து இரவு 11 மணிவரை இயங்கும்.
அருகில் உள்ள பாட்லா ஹவுஸ், கப்பா் மஞ்சில், ஓக்லா விகாா், ஜாகிா் நகா், ஹாஜி காலனி, நூா் நகா் போன்ற அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்லும். ஆரம்ப கட்டமாக 25 வாகனங்களுடன் தொடங்கப்பட்டுள்ளது.
அடுத்த சில தினங்களில் சுக்தேவ் விகாா், ஜசோலா விகாா் ஷாகீன்பாக் ஆகிய இரு ரயில் நிலையங்களைச் சென்றடையும் வகையில் 50 வாகனங்களாக அதிகரிக்கப்பட்ட உள்ளது.
இந்த வாகனத்தில் முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ.10-ம், அடுத்துவரும் கிலோமீட்டருக்கு தலா ரூ.5-ம் கட்டணமாக வசூலிக்கப்படும். இடிஓ செயலி மூலம் இந்த வாகனங்களில் பயணிகள் முன்கூட்டியே பதிவு செய்து பயணிக்கலாம்.
தற்போது தில்லி மெட்ரோ ஒருங்கிணைப்பில் 36 மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து கடைசி மைல் தொடா்பு வசதியை பயணிகளுக்கு அளிக்கும் வகையில் 300-க்கும் மேற்பட்ட இ-ரிக்ஷாக்கள் இயக்கப்பட்டு வருகின்றனா்.
அடுத்த மாத இறுதிக்குள் 15 மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து இ-ரிக்ஷா சேவை தொடங்கப்பட உள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...