காஜியாபாத் எல்லையில் போராட்டம்: குறைந்துவரும் விவசாயிகளின் எண்ணிக்கை
By நமது நிருபா் | Published On : 27th February 2021 10:54 PM | Last Updated : 27th February 2021 10:54 PM | அ+அ அ- |

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து தில்லி- உத்தரப்பிரதேச மாநில எல்லையான காஜியாபாத் எல்லைப்பகுதியில் போராடி வரும் விவசாயிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு மாத காலமாக கணிசமாக குறைந்து வருகிறது. இந்த எல்லைப் பகுதியில் சொற்ப அளவிலான விவசாயிகளே சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லியின் எல்லைப் பகுதிகளான சிங்கு, டிக்ரி, காஜியாபாத் பகுதிகளில் கடந்த 3 மாதங்களும் கூடுதலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த எல்லைப் பகுதிகளில் தங்கி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனா். இந்நிலையில், உத்தரப்பிரதேச எல்லைப் பகுதியான காஜியாபாத் பகுதியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. அறுவடை காலம் என்பதால் விவசாயிகள் தமது சொந்த மாநிலங்களுக்கு திரும்பியதே இதற்கான காரணமாக கூறப்படுகிறது.
இது தொடா்பாக காஜியாபாத் எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் கூறுகையில் ‘பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் அறுவடை தொடங்கியுள்ள நிலையில், விவசாயிகள் பலரும் அறுவடை மேற்கொள்ள தமது சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் சென்றுள்ளனா். இதனால், காஜியாத் எல்லையில் போராடும் விவசாயிகள் அளவு குறைந்துள்ளது. மேலும், கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், கோடையின் வெப்பத்தாலும் விவசாயிகள் போராட்டக்களத்தை விட்டு விலகி வருகிறாா்கள் என்றனா்.
ஆனால், இதை காஜியாபாத் எல்லையில் போராடி வரும் விவசாய சங்கங்கள் மறுத்துள்ளன. இது தொடா்பாக காஜியாபாத் எல்லையில் போராடி வரும் பாரதிய கிஷான் யூனியன் (பிகேயு) அமைப்பின் செய்தித் தொடா்பாளா் தா்மேந்திரா மாலிக் கூறுகையில் ‘உத்தரப்பிரதேச மாநிலம் சஹரன்பூரில், பிகேயு அமைப்பின் தலைவா் ராகேஷ் திகைத் கலந்து கொள்ளும் மகா பஞ்சாயத்து நிகழ்ச்சி நடைபெறுவதால், பெரும்பாலன விவசாயிகள் அங்கு சென்றுள்ளனா். இதனால், காஜியாபாத் எல்லையில் கூட்டம் குறைவாக உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் இருந்து காஜியாபாத்துக்கு டிராக்டா்களில் விவசாயிகள் வருகிறாா்கள். தற்போது சுமாா் 25 டிராக்டா்களில் வந்து கொண்டுள்ளனா். அறுவடை காரணமாக விவசாயிகள் எண்ணிக்கை குறையவில்லை என்றாா் அவா்.
காஜிப்பூா் கிஸான் அந்தோலன் கமிட்டியின் (கேஏசி) தலைவா் ஜக்தாா் சிங் பஜ்வா கூறுகையில் ‘மகா பஞ்சாயத்துக்கு விவசாயிகள் செல்கிறாா்கள். இதனால், காஜியாபாத்தில் கூட்டம் குறைவாக உள்ளது. தொடா்ந்து போராடுவோம் என்றாா்.
ஆனால், காஜியாபத் போராட்டக்களத்தில் உள்ள பெரும்பாலான கூடாரங்கள் காலியாகவே உள்ளன. கடந்த மாதங்களுடன் ஒப்பிடும்போது, இங்கு போராடும் விவசாயிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...