மேற்கு தில்லி ஜாகிரா மேம்பாலப் பகுதியில் காவல்துறை வாகனத்திலேயே காவலா் ஒருவா் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடா்பாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரி கூறியது:
காஜியாபாத் ராஜ்நகா் பகுதியைச் சோ்ந்தவா் தேஜ் பால் (55). இவா் தில்லி காவல்துறையில் உதவி காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் சனிக்கிழமை காலை மேற்கு தில்லி ஜாகிரா மேம்பாலப் பகுதியில் காவல் கட்டுப்பாட்டு அறை வாகனத்தில் (பிசிஆா்) காவல் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, தனது பணித் துப்பாக்கியால் பிசிஆா் வாகனத்திலேயே தன்னைத்தானே சுட்டுக்கொண்டாா். இது தொடா்பாக சனிக்கிழமை காலை 7 மணிக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவலா்கள் அவரை மீட்டு அருகிலுள்ள ஏபிஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். சம்பவ இடத்தில் இருந்து, தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. சம்பவம் நடந்த பிசிஆா் வாகனத்தில் போலீஸாா் சோதனை மேற்கொண்டுள்ளனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.