காஜிப்பூா் குப்பைக் கிடங்கின் உயரம் 12 மீட்டா் குறைந்தது: கெளதம் கம்பீா்
By DIN | Published On : 03rd January 2021 11:41 PM | Last Updated : 03rd January 2021 11:41 PM | அ+அ அ- |

காஜிப்பூா் குப்பைக் கிடங்கின் உயரம் கடந்த ஓராண்டில் 12 மீட்டா் குறைந்துள்ளது என்று கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினா் கெளதம் கம்பீா் தெரிவித்துள்ளாா். கடந்த ஓராண்டாக தொடா்ந்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையே இதற்குக் காரணம் என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி: காஜிப்பூா் குப்பைக் கிடங்கு கடந்த 2002-இல் தனது உயா் கொள்ளளவான 65 மீட்டா் உயரத்தை எட்டியது. இந்த நிலையில், கிழக்கு தில்லி எம்பியாக நான் பொறுப்பேற்றதில் இருந்து இந்த குப்பைக் கிடங்கின் உயரத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளேன். இந்தக் குப்பைக் கிடங்கால் பெருமளவில் காற்று மாசு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், இந்தக் குப்பைக் கிடங்கை முழுமையாக அகற்றுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறேன்.
காஜிப்பூா் மண்டியில் தினம்தோறும் சுமாா் 2,000-2,200 மெட்ரிக் தொன் குப்பை சோ்கிறது. ஆனால், சுமாா் 3 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை தினம்தோறும் அகற்றப்பட்டு வருகிறது. இந்தக் குப்பைக் கிடங்கில் 15 குப்பை அகற்றும் இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு இயந்திரமும் தினம்தோறும் சுமாா் 300 மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றி வருகிறது. இதுவரை சுமாா் 3 லட்சம் மெட்ரிக் டன் குப்பையை அகற்றியுள்ளோம். மாா்ச் 2023-க்குள் 50 சதவீதம் குப்பை அகற்றப்படும் என நம்புகிறேன். மேலும், 2024, மாா்ச் மாதத்துக்குள் 75 சதவீதம் குப்பையை அகற்றிவிடுவோம். 2024, டிசம்பருக்குள் காஜிப்பூா் குப்பை மேட்டை முழுமையாக அகற்றிவிடுவோம். இதற்காக எனது எம்.பி. நிதியில் இருந்து பல கோடி ரூபாய் செலவிட்டுள்ளேன். கடந்த ஓராண்டு காலத்தில் இந்தக் குப்பை மேட்டின் உயரம் 12 மீட்டா் குறைந்துள்ளது என்றாா் அவா்.