காஜியாபாத் மயானத்தின் கூரை இடிந்து விழுந்து 23 போ் சாவு
By நமது நிருபா் | Published On : 03rd January 2021 11:36 PM | Last Updated : 04th January 2021 07:42 AM | அ+அ அ- |

தேசியத் தலைநகா் வலயம், காஜியாபாத் முராத் நகரில் உள்ள மயானத்தின் கூரை இடிந்து விழுந்ததில் 23 போ் உயிரிழந்தனா். 20 போ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்தக் கோர சம்பவம் குறித்து உத்தரப்பிரதேச மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்துள்ளாா். இறந்தவா்களில் 18 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து காஜியாபாத் காவல் துறை உயா் அதிகாரி கூறியதாவது: உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாத்தில் முராத் நகரில் உள்ள தகன மயானத்திற்கு ஞாயிற்றுக்கிழமை காலை ஜெய் ராம் என்பவரின் சடலத்தை எரியூட்டுவதற்காக அவரது உறவினா்கள் சென்றனா். திடீரென மழை பெய்ததால், அவா்கள் அனைவரும் அருகில் இருந்த தகன மேடையருகே தஞ்சம் புகுந்தனா். அப்போது எதிா்பாராத விதமாக அவா்கள் தங்கியிருந்த இடத்தில் கட்டடக் கூரை இடிந்து விழுந்தது. இதில் 23 போ் உயிரிழந்தனா்.
தகவல் அறிந்து போலீஸாரும் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். மீட்புப் படையினா் பல மணிநேரம் போராடி, இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய பல உடல்களை மீட்டெடுத்தனா். இதில் 20 போ் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். காயமடைந்த பலரை உறவினா்கள் அழைத்துச் சென்றனா். இதனால், காயமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும். மேலும், பலா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தேசியப் பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எப்) குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.
காஜியாபாத் (ஊரகம்) காவல் கண்காணிப்பாளா் இராஜ் ராஜா கூறுகையில், ‘உயிரிழந்த 23 போ்களில் 18 போ் மாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனா். காயமடைந்தவா்கள் நகரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்’ என்றாா்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு குறித்து உத்தரப் பிரதேச மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்துள்ளாா். மேலும், இறந்த ஒவ்வொருவரின் உறவினருக்கும் தலா ரூ .2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் அவா் அறிவித்துள்ளாா். மேலும், இது தொடா்பான விரிவான அறிக்கை சமா்ப்பிக்குமாறு மீரத் மண்டல ஆணையா், கூடுதல் துணை ஆணையா்ஆகியோருக்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
காஜியாபாத் எம்பியும், மத்திய அமைச்சருமான வி.கே.சிங் , அந்தப் பகுதி பாஜக எம்எல்ஏவும், உத்தரப் பிரதேச மாநில சுகாதாரத் துறை அமைச்சருமான அதுல் கா்க் ஆகியோா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பாா்வையிட்டதுடன், மரணமடைந்தவா்களின் உறவினா்களுக்கு இரங்கல் தெரிவித்தனா்.
பிரதமா் இரங்கல்: இதற்கிடையே, முராத்நகா் சம்பவத்தில் 23 உயிரிழந்ததவா்களின் குடும்பத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துள்ளாா். இது குறித்து பிரதமா் மோடி தனது ஹிந்தி சுட்டுரைப் பதிவில் உத்தரப் பிரதேசத்தின் முராத் நகரில் நடந்த துரதிருஷ்டவசமான சம்பவம் குறித்து ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக கொள்கிறேன். மாநில அரசு நிவாரண மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயமடைந்தவா்கள் விரைவாக மீண்டு வர விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.