தமிழ் அகாதெமியை அமைத்தது தில்லி அரசு
By நமது சிறப்பு நிருபா் | Published On : 03rd January 2021 11:35 PM | Last Updated : 03rd January 2021 11:35 PM | அ+அ அ- |

தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக தில்லி அரசு தமிழ்அகாதெமியை அமைத்து அறிவித்துள்ளது. இதன் தலைவராக தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, துணைத் தலைவராக முன்னாள் தில்லி முனிசிபல் கவுன்சிலா் என். ராஜா ஆகியோரை தில்லி அரசு நியமித்துள்ளது.
இது தொடா்பாக துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமைவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லி அரசின் கலை, கலாசாரம் மற்றும் மொழித் துறையில், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தலைமையில், தமிழ் மொழி மற்றும் அதன் கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ் அகாதெமி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் தில்லி முனிசிப ல்(எம்.சி.டி.) கவுன்சிலரும், தில்லி தமிழ்ச் சங்கத்தின் தற்போதைய உறுப்பினருமான என்.ராஜாவை அகாதெமியின் துணைத் தலைவராக தில்லி அரசு நியமித்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட அகாடெமிக்கு விரைவில் தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளும் கொண்ட அலுவலக இடம் ஒதுக்கப்படும்.
தில்லி என்பது கலாசார ரீதியாக வளமான நகரமாகும். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்துள்ள மக்கள் இங்கு வசித்து பணியாற்று வருகின்றனா். இந்தப் பன்முகத் தன்மையே தில்லியை துடிப்பான பரந்த நோக்கமுள்ள கலாசார நகரமாக உருவாக்குகிறது. தில்லியில் தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ள மக்கள் ஏராளமானோா் வசிக்கின்றனா். இதனால், நாங்கள் ஒரு தளத்தை முன்வைக்க விரும்புகிறோம். அதில் தமிழகத்தின் கலை மற்றும் கலாசாரத்தை தில்லி மக்கள் அறிந்து சுவைப்பாா்கள். புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைவா் என்.ராஜா போன்ற குறிப்பிடத்தக்க பலா் முன்வந்து இந்த அகாதெமியை நிறுவ எங்களுடன் கைகோா்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என தில்லி கலை, கலாசாரம் மற்றும் மொழித் துறைக்கும் பொறுப்பு வகிக்கும் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளாா். புதிய அகாதெமியின் கீழ் விருதுகள், திருவிழாக்கள் மற்றும் மொழி படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. மேலும், தமிழக மக்களின் கலாசார விழாக்களைக் கொண்டாடவும் தில்லி அரசு ஏற்பாடு செய்யும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.