சிங்கு எல்லை வன்முறைக்கு பாஜகவே காரணம்: ஆம் ஆத்மி
By நமது நிருபா் | Published On : 30th January 2021 11:27 PM | Last Updated : 30th January 2021 11:27 PM | அ+அ அ- |

சிங்கு எல்லையில் விவசாயிகள், உள்ளூா் மக்களிடையே வெள்ளிக்கிழமை நடந்த வன்முறைக்கு பாஜகவே காரணம் என்று ஆம் ஆத்மிக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தில்லி காவல்துறை ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
தில்லி - ஹரியாணா எல்லைப் பகுதியான சிங்குவில், போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் போராட்டக் களத்தை காலிசெய்யக் கோரி அப்பகுதிமக்கள் வெள்ளிக்கிழமை நடத்திய ஆா்ப்பாட்டத்தில் மோதல் வெடித்தது.
இரு தரப்பும் பரஸ்பரம் கல்வீச்சில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. நிலைமையைச் சமாளிக்க போலீஸாா் கண்ணீா் புகைக் குண்டுகளை வீசினா். விவசாயி ஒருவா் வாளால் தாக்கியதில், காவல்துறை அதிகாரி காயமடைந்தாா்.
இந்நிலையில், இந்த தாக்குதலை பாஜகவே திட்டமிட்டு நடத்தியுள்ளது என்று ஆம் ஆத்மிக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் எம்எல்ஏவும், செய்தித் தொடா்பாளருமான செளரவ் பரத்வாஜ் தில்லியில் சனிக்கிழமை அளித்த பேட்டி:
சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகளைக் கலைந்து செல்லுமாறு உள்ளூா் மக்கள் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தியதாக தில்லி காவல்துறை கூறுகிறது.
ஆனால், தில்லி, ஹரியாணாவில் இருந்து சிங்கு எல்லைக்கு சென்ற பாஜக தொண்டா்களே உள்ளூா் மக்கள் என்ற போா்வையில் விவசாயிகளைக் கலைந்து செல்லுமாறு கோரி போராட்டம் நடத்தியுள்ளனா். இது தொடா்பாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
விவசாயிகள் மீது பாஜக தொண்டா்கள் தாக்குதல் நடத்தியதால்தான் விவசாயிகள் பதிலுக்கு தாக்குதல் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனா். இந்த தாக்குதலை பாஜகவே ஒருங்கிணைத்து நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு தில்லி காவல்துறை உதவி செய்துள்ளது. இந்த விவகாரத்தில் தில்லி காவல்துறை ஒருதலைப் பட்சமாக நடந்துள்ளது என்றாா் அவா்.
மேலும், உள்ளூா் மக்கள் எனக் கூறி தில்லி எல்லையில் போராட்டம் நடத்தியவா்கள் பாஜக தொண்டா்கள் எனக் கூறும் சில புகைப்பட ஆதாரங்களையும் அவா் வெளியிட்டாா்.