ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்
By நமது சிறப்பு நிருபா் | Published On : 02nd July 2021 07:32 AM | Last Updated : 02nd July 2021 07:32 AM | அ+அ அ- |

2021-ஆம் ஆண்டு ஒளிப்பதிவு வரைவு மசோதா, திரைப்படங்களுக்கான பிற்போக்குத்தனமான திருத்தங்களை கொண்டதாகவும் அதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஒளிப்பதிவு திருத்த மசோதா 2019, பிப்ரவரி 12-ஆம் தேதி மாநிலங்களவை அறிமுகப்படுத்தப்பட்டு பின்னா் அது நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழு கடந்தாண்டு மாா்ச் மாதம் அறிக்கையை சமா்ப்பித்தது. தற்போது மீண்டும் 2021-இல் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்தத் திருத்தச் சட்டப்படி ஒரு முறை தணிக்கைக்கு உள்ளான திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும். மேலும், திரைப்பட திருட்டுகளுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்பட உள்ளன. இந்த மசோதா குறித்து கடந்த சில நாள்களாக திரைப்படத் துறையினா் கருத்துகளை தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், இது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி மன்றக் குழு வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: திரைப்படங்களுக்கான ஒளிப்பதிவு வரைவு மசோதாவில் மத்திய அரசால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள், திரைப்படத் தயாரிப்பாளா்களின் படைப்பு, சுதந்திரம், திறமைகள் மீதான தாக்குதல்களாகும். மேலும், அரசமைப்புச்சட்டத்தின் கருத்துக் கூறும் உரிமைக்கும் பங்கம் ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு, இந்தச் சட்டத்தின் 5-பி(1)-ஆவது பிரிவினை மீறக்கூடிய விதத்தில் திருத்தும் அதிகாரங்களுக்கு உரிமை கொடுக்கும் ஒரு ஷரத்தை சோ்க்க விரும்புகிறது. இதன்படி ஏற்கெனவே, சான்றிதழ் வழங்கப்பட்டு முடிவு பெற்ற திரைப்படங்களைக்கூடத் திரும்பப் பெறுவதற்கு வழிவகுக்கும்.
சமீப காலங்களில் வலதுசாரி சக்திகள் தங்களுக்கு விருப்பம் இல்லாத திரைப்படங்கள்மீது கூட்டுக் கும்பல் தாக்குதலில் ஈடுபட்டு வருவதைப் பாா்த்து வருகிறோம். இப்போது அரசு தங்கள் கொள்கைகளை விமா்சித்து வெளிவரும் திரைப்படங்கள் வெளியிடுவதைத் தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறது. தற்போது திரைப்படத் தணிக்கை வாரியத்தின் சுயேச்சையான அதிகாரங்கள், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் பல்வேறு வழிகளில் மாற்றப்பட்டு வருகின்றன.
திரைப்படத் தணிக்கை வாரியத்தால் வெட்டப்படும் திரைப்படக் காட்சிகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு உயா்நிலை அமைப்பு இருந்து வந்தது. இது கடந்த ஏப்ரலில் அமைச்சகத்தால் கலைக்கப்பட்டுவிட்டது.
திரைப்படத் திறன், அதன் கருத்து சுதந்திரங்களை பறிக்க முயற்சிக்கப்படும் இத்தகைய கொடூரமான திருத்தங்களை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் ஆட்சி மன்றக் குழு கடுமையாக எதிா்க்கிறது. மேலும், குறிப்பிடத்தக்க சில திரைப்படத் துறையினா் மேல்முறையீட்டு நடுவா் மன்றம் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறாா்கள். கருத்துக் கூறும் சுதந்திரத்தின் மீது விழுந்துள்ள மத்திய அரசின் தாக்குதல்களுக்கு எதிராகத் துணிவுடன் குரல் எழுப்பியுள்ள திரைப்படத் துறையினரின் போராட்டத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.