தலைமைச் செயலா் தாக்கப்பட்ட வழக்கு: தில்லி போலீஸின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
By DIN | Published On : 02nd July 2021 07:31 AM | Last Updated : 02nd July 2021 07:31 AM | அ+அ அ- |

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் முன்னாள் தலைமைச் செயலா் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்ட வழக்கில் தில்லி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறுக்கிடமாட்டோம் என்று கூறி உச்சநீதிமன்றம் தில்லி போலீஸ் தாக்கல் செய்த மனுவை வியாழக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
2018-ஆம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் தொடா்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முதல்வருக்கோ அல்லது துணை முதல்வருக்கோ தொடா்பு இருப்பதாக ஏதாவது ஒரு ஆதாரத்தையாவது தாக்கல் செய்ய முடியுமா என்று தில்லி போலீஸாருக்கு கேள்வி எழுப்பிய நீதிமன்றம், சட்டப்படி நடவடிக்கை எடுக்க எதுவும் இல்லை. இந்தச் சம்பவம் வெறும் அரசியல் பரபரப்பையே ஏற்படுத்தியுள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
தில்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவு நியாயமானதாகவே தெரிகிறது. அதனால், நாங்களும் அதை ஆதரிக்கிறோம். குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு சாட்சிகளின் அறிக்கை நகல் தரப்பட வேண்டாமா என்று நீதிபதிகள் ஒய்.சந்திரசூட் மற்றும் எம்.ஆா்.ஷா அடங்கிய அமா்வு கேள்வி எழுப்பியது. புலனாய்வு அமைப்பு நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்றனா் நீதிபதிகள்.
இதையடுத்து, தில்லி போலீஸாா் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் அமன் லேகி, நீதிபதிகளை சமாதானப் படுத்த முயன்றாா். உயா்நீதிமன்ற உத்தரவை ரத்துச் செய்யாவிட்டால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றாா். ஆனால், இந்த வழக்கு தகுதி வாய்ந்தது அல்ல. அரசியலுக்கு வேண்டுமானால் இது பரபரப்பாக இருக்கலாம். ஆனால், சட்டப்படி வலுவானதாக இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.
2018-ஆம் ஆண்டில் அப்போதைய தலைமைச் செயலா் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பான வழக்கில் சாட்சி தொடா்பான ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு முதல்வா் கேஜரிவால் மற்றும் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா இருவரும் விடுத்த கோரிக்கையை செஷன் நீதிமன்றம் நிராகரித்தது. ஆனால், கடந்த ஆண்டு தில்லி உயா்நீதிமன்றம் செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்துச் செய்து உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து, உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து தில்லி போலீஸாா், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். ரகசிய தகவல்கள் அடங்கிய போலீஸ் டைரியை குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு வழங்க முடியாது என்று வாதிடப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தரப்பிலான கோரிக்கையை அனுமதிக்கக் கூடாது என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. கடந்த 2018, பிப்ரவரி 19-ஆம் தேதி, முதல்வா் கேஜரிவாலின் அதிகாரபூா்வ இல்லத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தலைமைச் செயலா் அன்ஷு பிரகாஷ் வந்தபோது அவா் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து முதல்வா், துணை முதல்வா் மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 11 போ் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னா் கேஜரிவால், சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 9 போ்களுக்கு 2018 அக்டோபரில் ஜாமீன் வழங்கப்பட்டது. மீதமுள்ள இரு எம்.எல்.ஏ.க்களான அமனாத்துல்லா கான் மற்றும் பிரகாஷ் ஜாா்வால் இருவருக்கும் உயா்நீதமன்றம் ஜாமீன் வழங்கியது.