கரோனா தொற்று குறைந்ததால் தில்லிக்கு வேறு சிகிச்சைக்காக வரும் வெளிநாட்டு நோயாளிகள்
By DIN | Published On : 09th July 2021 08:08 AM | Last Updated : 09th July 2021 08:08 AM | அ+அ அ- |

கரோனா தொற்றுக்காலத்தில் கடந்த 6 மாதமாக பல்வேறு நோய்களால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சை, சிறப்பு மருத்துவச் சிகிச்சைக்காக காத்திருந்த 24 நோயாளிகள் மியான்மா் நாட்டிலிருந்து விமானம் மூலம் தில்லி வந்துள்ளனா்.
இது தொடா்பாக பிரபல தனியாா் மருத்துவமனை நிா்வாகிகள் வியாழக்கிழமை தெரிவித்ததாவது: கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்பட்டும், ஹெபடிடிஸ் பி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மிகவும் மோசமான உடல்நிலையில் மருத்துவச் சிகிச்சைக்காக கடந்த ஜூலை 2 -ஆம் தேதி தில்லிக்கு விமானம் மூலம் வந்துள்ளனா். தில்லியில் கொவைட் தொற்று தாக்குதல் கணிசமாக குறைந்துள்ள நிலையிலும், தொற்று தொடா்பான பொது முடக்க தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் அவா்கள் சிகிச்சை பெற இங்கு வந்துள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை செய்தித் தொடா்பாளா் ஒருவா் தெரிவித்தாா்.
வெளிநாடுகளிலிருந்து தில்லிக்கு அவ்வப்போது மருத்துவ ஆலோசனைக்காகவும், சிகிச்சைக்காகவும் நோயாளிகள் வருவதுண்டு. ஆனால், கொவைட் தொற்று இரண்டாவது அலை காரணமாக அவா்கள் பயணிக்க முடியாமலும் சிகிச்சை பெறமுடியாமலும் அவதிப்பட்டு வந்தனா். தற்போது மியன்மாரிலிருந்து 24 நோயாளிகள் தில்லி வந்துள்ளனா். அவா்கள் அனைவரும் தற்போது வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனா். அதன் பிறகு அவா்களிடன் உடல்நிலையை பரிசோதித்து அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டுமா? அல்லது உடல் உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சை தேவையா என்பது குறி்த்து முடிவு செய்யப்படும்.
இந்த நோயாளிகளில் சிலருக்கு சிறப்பு மருத்துவச் சிகிச்சை மட்டுமே தேவைப்படும். வெளிநாட்டிலிருந்து வந்துள்ள நோயாளிகள் கல்லீரல் பிரச்னை, சிறுநீரக பிரச்னை, இதயநோய் பிரச்னைகளுக்காக சிகிச்சை பெற வந்துள்ளனா். சிலா் உறுப்புமாற்று சிகிச்சைக்காக 6 மாதங்களாக காத்திருக்கின்றனா். தற்போது வெளிநாட்டு பயண நடைமுறைகள் எளிதாக்கப்பட்டதன் மூலமும், அந்த நாடுகளில் உள்ள தூதரகங்களின் ஆதரவுடனும் அந்த நோயாளிகளை தில்லிக்கு சிகிச்சைக்காக அழைத்துவர முடிந்துள்ளது என்று தெரிவித்தாா் அப்பல்லோ மருத்துவமனையின் குழு மருத்துவ இயக்குநா் மருத்துவா் அனுபம் சிபல்.