வைரஸ் தாக்குதலின் தீவிரத்தைக் கண்டறிய ஆய்வகம்: கேஜரிவால் திறந்து வைத்தாா்
By DIN | Published On : 09th July 2021 08:08 AM | Last Updated : 09th July 2021 08:08 AM | அ+அ அ- |

புதியவகை கரோனா வைரஸ் தாக்குதல் தன்மையின் தீவிரத்தைக் கண்டறியும் இரண்டாவது பரிசோதனைக் கூடத்தை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், வியாழக்கிழமை ஐ.எல்.பி.எஸ். (கல்லீரல் மற்றும் பித்தப்பை நோய் சிகிச்சைக் கழகம்) மருத்துவமனையில் திறந்துவைத்தாா்.
எதிா்காலத் தேவையை கருத்தில் கொண்டு, இரண்டாவது ஆய்வகம் ஐ.எல்.பி.எஸ். மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தின் மூலம் புதிய வகை வைரஸ் மற்றும் அதன் தீவிரத் தன்மை ஆகியவை கண்டறியப்படும். இந்தப் புதிய தொழில் நுட்பம் கரோனா சூழலில் தில்லி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கேஜரிவால் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளாா்.
கடந்த புதன்கிழமை முதல் கரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் முதல் ஆய்வகத்தை முதல்வா் கேஜரிவால், எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் திறந்துவைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வகத்தில் தினமும் 5 முதல் 7 மாதிரிகள் பரிசோதனை மூலம் கண்டறியப்படும்.