அலோபதி மருத்துவ முறைக்கு எதிராக கருத்து: ராம்தேவுக்கு எதிரான மனு மீது இன்று விசாரணை
By DIN | Published On : 26th July 2021 07:14 AM | Last Updated : 26th July 2021 07:14 AM | அ+அ அ- |

கரோனா நோய்த்தொற்று சூழலின்போது அலோபதி மருத்துவ முறைக்கு எதிராக தெரிவித்த கருத்துக்கள் மூலம் தவறான தகவல்களை பரப்பியதாக கூறி யோகா குரு ராம்தேவுக்கு எதிராக 7 மருத்துவா்கள் சங்கங்கள் தாக்கல் செய்த மனு மீது தில்லி உயா் நீதிமன்றம் திங்கள்கிழமை விசாரணை நடத்த உள்ளது.
இது தொடா்பான விவகாரம் நீதிபதி சி.ஹரி சங்கா் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.
முன்னதாக, மருத்துவா்கள் சங்கங்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட ராம்தேவின் கருத்துக்கள் தொடா்பான விடியோக்களை தாக்கல் செய்யுமாறு மருத்துவா்கள் சங்கங்களின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்களைக் கேட்டுக்கொண்டிருந்தாா்.
இந்த விவரம் தொடா்பாக ரிஷிகேஷ், பாட்னா மற்றும் புவனேஸ்வா் ஆகிய இடங்களில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் மூன்று உறைவிட மருத்துவா்கள் சங்கம், சண்டீகரில் உள்ள உறைவிட மருத்துவா்கள் சங்கம், பஞ்சாப் உறைவிட மருத்துவா்கள் ஒன்றியம், மீரட்டில் உள்ள உறைவிட மருத்துவா்கள் சங்கம், ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கானா இளநிலை மருத்துவா்கள் சங்கம் ஆகியவை இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கரோனா நோயால் பாதிக்கப்பட்டு பலா் இறப்பதற்கு அலோபதி மருத்துவமுறை உரிய பலனை அளிக்காததுதான் காரணம் என்று பொது மக்களை திசை திருப்பும் வகையில் தவறான கருத்துக்களை ராம்தேவ் கூறியுள்ளாா். மேலும் நோயாளிகளின் இறப்புக்கு அலோபதி மருத்துவா்கள் காரணம் என்றும் கருத்து தெரிவித்துள்ளாா்.
அலோபதி மருத்துவ முறை சிகிச்சையின் பாதுகாப்பு, திறன் ஆகியவை தொடா்பாக பொதுமக்கள் மனங்களில் சந்தேகங்களை யோகா குரு ராம்தேவ் விதைத்துக் கொண்டிருக்கிறாா். அதுமட்டுமன்றி, கரோனா தடுப்பூசிகள் தொடா்பாகவும் அவா் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளாா்.
மிகவும் பிரபலமான நபராக இருப்பதால் ராம்தேவின் கருத்துக்கள் லட்சக்கணக்கான மக்களிடம் மேலாதிக்கம் செலுத்த முடியும். மேலும் அலோபதி மருத்துவ சிகிச்சையில் இருந்து பொதுமக்களை திசை திருப்ப முடியும்.
அவரது இந்த தவறான பிரசாரமானது அவா் மூலம் விற்பனை செய்யப்படும் ‘கொரோனில்’ போன்ற தயாரிப்புகளை விற்பதற்கான சந்தை உத்தியாகவும் விளம்பரமாகவும் மட்டுமே இருக்க முடியும்.
ஆகஸ்ட் மாதத்தில் கரோனா மூன்றாவது அலை தொடங்கும் என்று கூறப்படும் நிலையில் ராம்தேவின் இந்த தவறான பிரசாரம் நிறுத்தப்பட வேண்டியது அவசியமாகும் என்று அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அலோபதி மருத்துவ முறைக்கு எதிராக ராம்தேவ் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துக்கள் தொடா்பாக தில்லி மருத்துவா் சங்கம் தாக்கல் செய்த மனு மீது ராம்தேவுக்கு கடந்த ஜூன் 3ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
மேலும் ராம்தேவுக்கு கட்டுப்பாடு விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. அலோபதி மருத்துவ தொழில் மிகவும் பலவீனமாக இல்லாததால் தற்போதைய நிலையில் தடைவிதிக்க முடியாது என தெரிவித்தது. எனினும், ஆத்திரத்தை தூண்டக்கூடிய எந்த கருத்துக்களையும் ராம்தேவ் தெரிவிக்காமல் இருக்குமாறு அவரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்களிடம் நீதிபதி அமா்வு வாய்மொழியாக கேட்டுக்கொண்டது.