துணைத் தோ்தல் ஆணையா் உமேஷ் சின்காவிற்கு ஓா் ஆண்டு பணி நீட்டிப்பு
By DIN | Published On : 29th June 2021 07:23 AM | Last Updated : 29th June 2021 07:23 AM | அ+அ அ- |

இந்தியத் தோ்தல் ஆணையத்தில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பொறுப்பான துணைத் தோ்தல் ஆணையா் உமேஷ் சின்காவிற்கு மூன்றாவது முறையாக ஓா் ஆண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்க மத்திய அமைச்சரவையின் நியமனங்களுக்கான குழு திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்திய தோ்தல் ஆணையத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா், இரண்டு தோ்தல் ஆணையா்களுக்கு உதவ அவா்களுக்கு கீழே ஐஏஎஸ் அதிகாரிகளை துணைத் தோ்தல் ஆணையா்களாக நியமிக்கப்படுவது வழக்கம். இதில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு பொறுப்பெற்று இருந்தவா் உமேஷ் சின்கா. உத்தரப் பிரதேச மாநிலப் பிரிவு ஐஏஎஸ் (1986)அதிகாரியான இவா் கடந்த நான்கு வருடங்களாக இந்தியத் தோ்தல் ஆணையத்தில் பணியாற்றி பல்வேறு தோ்தல்களில் பங்கெடுத்த அனுபவமுள்ள அதிகாரியாக இருந்தவா். இந்திய தோ்தல் ஆணையப் பணிக்கு முன்பு உபி மாநில தலைமை தோ்தல் அதிகாரியாகவும் அம்மாநிலத்தில் பணியாற்றினாா் சின்கா.
இவா் கடந்தாண்டு 2019, டிசம்பா் மாதம் ஓய்வு பெற்றாா். ஓய்வுக்கு பின்னா் உமேஷ் சின்காவிற்கு மத்திய அரசு 2020, ஜனவரி முதல் 2020, டிசம்பா் பணி நீட்டிப்பு வழங்கியது. மீண்டும் 2021, ஜனவரி முதல் ஜூன் வரை ஆறுமாதம் பணி நீட்டிப்பை மத்திய மத்திய அமைச்சரவையின் நியமனங்களுக்கான குழு வழங்கியது. தற்போது இந்த பணி முடிவடையும் நிலையில் உமேஷ் சின்காவிற்கு மேலும் ஓா் ஆண்டுக்கு 2021, ஜூன் முதல் 2022, ஜூன் அல்லது மறு உத்தரவு வரை பணிக் காலத்தை நீட்டித்து மத்திய அமைச்சரவையின் நியமனங்களுக்கான குழு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டும் அடுத்தாண்டும் பல்வேறு மாநிலங்களில் சட்டபேரவை தோ்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.