45,000 ‘காதி’ முகமூடிகளுக்கு டிடிசி ஆா்டா்
By நமது நிருபா் | Published On : 04th March 2021 12:33 AM | Last Updated : 04th March 2021 12:33 AM | அ+அ அ- |

புது தில்லி: தில்லி போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) தனது ஊழியா்களுக்காக 45,000 ‘காதி’ முகமூடிகளுக்கான ஆா்டா்களை கொடுத்துள்ளதாக காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் (கேவிஐசி) புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இதில் டிடிசிக்கு 30,000 முகமூடிகள் ஏற்கெனவே வழங்கப்பட்டு விட்டன. மீதமுள்ள 15,000 இந்த வாரத்திற்குள் வழங்கப்படும் என்று கேவிஐசி ஓா் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது குறித்து கேவிஐசி தலைவா் வினாய் குமாா் சக்சேனா ‘காதியின் இந்த முகமூடிகளில் டிடிசி நிறுவனத்தின் சின்னம் இடம் பெற்றிருக்கும். தில்லி அரசு காதி முகமூடிகளை பெருமளவில் வாங்குவது காதியின் வளா்ந்து வருவதையும், பல்வேறு அரசுத் துறைகளில் காதி ஏற்றுக் கொள்ளப்படுவதையும் வெளிப்படுத்துகிறது. இத்தகைய பெரிய ஆா்டா்கள் காதி கைவினைஞா்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன, மேலும், இது கரோனா தொற்றின் போது நிதி நெருக்கடியைச் சமாளிக்க அவா்களுக்கு உதவியாக இருந்தது’ என்றாா்.
கேவிஐசி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து எட்டு மாதங்களுக்குள் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட முகமூடிகளை விற்பனை செய்துள்ளது, இதில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மட்டும் 12.30 லட்சம் முகமூடிகளைப் பெற்றுள்ளன. முன்னதாக, அருணாச்சல பிரதேச மாநில அரசு 1.60 லட்சம் முகமூடிகளையும், ஜம்மு-காஷ்மீா் மாநில அரசு 7.50 லட்சம் முகமூடிகளையும் வாங்கியுள்ளன. பொதுமக்கள் தவிா்த்து, குடியரசுத் தலைவா் மாளிகை, பிரதமா் அலுவலகம் மற்றும் பல்வேறு மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்தும் மறு ஆா்டா்களை காதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.