வடக்கு தில்லி தொழிற்சாலை தீ விபத்து: விசாரிக்க குழுவை அமைத்தது என்ஜிடி
By DIN | Published On : 04th March 2021 12:38 AM | Last Updated : 04th March 2021 12:38 AM | அ+அ அ- |

புது தில்லி: வடக்கு தில்லி பிரதாப் நகரில் தொழிற்சாலையில் நிகழ்ந்த தீவிபத்து குறித்து விசாரிக்க குழுவை அமைத்து தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
பிரதாப் நகரில் பிப்ரவரி 27-ஆம் தேதி நள்ளிரவில் தொழிற்சாலையில் பெரும் தீவிபத்து நிகழ்ந்தது. இதில் 35 வயது இளைஞா் உயிரிழந்தாா். தீயணைப்பு வீரா்கள் உள்பட 3 போ் காயமடைந்தனா். இதுகுறித்து வெளியான ஊடகச் செய்தியை தேசிய பசுமைத் தீா்ப்பாயத் தலைவா் -நீதிபதி ஏ.கே. கோயல் தலைமையிலான அமா்வு புதன்கிழமை கவனத்தில் எடுத்துக் கொண்டு விசாரித்தது. அப்போது, அமா்வு பிறப்பித்த உத்தரவு: இந்த விவகாரம் தொடா்பாக விசாரிக்க ஐந்து நபா் குழு அமைக்கப்படுகிறது.
இந்தக் குழுவில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு, தில்லி தொழிற்சாலை பாதுகாப்பு இயக்குநா், வடக்கு தில்லி மாநகராட்சி, வடக்கு தில்லி மாவட்ட ஆட்சியா் ஆகியோா் இடம்பெறுவா். இந்தக் குழு சம்பவ இடத்தில் விசாரித்து அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடா்பான அடுத்த விசாரணை ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு பட்டியலிடப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...