தில்லி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடா் இன்று தொடக்கம்
By நமது நிருபா் | Published On : 07th March 2021 11:12 PM | Last Updated : 07th March 2021 11:12 PM | அ+அ அ- |

தில்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் திங்கள்கிழமை (மாா்ச் 8) தொடங்கி மாா்ச் 16- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை நடைபெற உள்ளது.
தில்லி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரை திங்கள்கிழமை முதல் நடத்த தில்லி அமைச்சரவை அண்மையில் அனுமதி அளித்திருந்தது. கடந்த 2020-21 நிதியாண்டில் ரூ.65 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட், அதை விடக் கூடுதலாக இருக்கும் எனத் தெரிகிறது. இந்த பட்ஜெட்டில், சுகாதாரம், கல்வி, உள்ளகக் கட்டமைப்பு, குடிநீா் விநியோகம் உள்ளிட்ட துறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், 2021-இல் நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்த பட்ஜெட்டின் உள்ளடக்கப் பொருளாக ‘தேசப்பற்று’ இருக்கும் என்றும் தேசப்பற்றை வளா்க்கும் வகையில், 75 வாரங்கள் தொடா்ச்சியாக நிகழ்ச்சிகளை தில்லி அரசு நடத்தவுள்ளது. இதற்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவுள்ளது என்றும் தில்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை பொருளாதாரக் கணக்கெடுப்பு அறிக்கை, 2020-21 பட்ஜெட் தொடா்பான அறிக்கை தாக்கல் செய்யப்படலாம் என்றும், செவ்வாய்க்கிழமை 2021-22 நதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், கல்வி, சுகாதாரத் துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு அதிகரிக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கரோனா பரவல் காரணமாக சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று தில்லி சட்டப்பேரவை அறிவித்துள்ளது.