வீட்டுக்கே சென்று ரேஷன் விநியோகிக்கும்திட்டம் மாா்ச் 25-இல் தொடக்கம்
By DIN | Published On : 12th March 2021 01:01 AM | Last Updated : 12th March 2021 01:01 AM | அ+அ அ- |

புது தில்லி: தில்லி அரசு வீட்டுக்கே சென்று ரேஷன் பொருள்கல் விநியோக திட்டத்தை மாா்ச் 25-இல் சீமாபுரியில் தொடங்கத் தயாராக உள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். அன்றைய தினம் குறைந்த எண்ணிக்கையிலான வீடுகளுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகிக்கப்படவுள்ளன. ‘முக்யா மந்திரி கா் கா் ரேஷன் யோஜ்னா’ என்ற இந்தத் திட்டத்தை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தொடங்கி வைக்கவுள்ளாா் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
இந்தத் திட்டம் ஆரம்பத்தில் சீமாபுரியில் 100 வீடுகளை உள்ளடக்கும். ஏப்ரல் 1 முதல் சீமாபுரி மற்றும் பிற பகுதிகளில் உள்ள அனைத்து தகுதியுள்ள குடும்பங்களுக்கு இது விரிவுபடுத்தப்படும் என்று மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
கேஜரிவால் தனது குடியரசு தின உரையில், வீட்டுக்குச் சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் முன்முயற்சி பொதுவிநியோக முறையை மாற்றுவதில் ஒரு புரட்சிகர நடவடிக்கை என்று கூறியிருந்தாா். உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் துறை மற்றும் தில்லி மாநில சிவில் சப்ளைஸ் காா்ப்பரேஷன் (டிஎஸ்சிஎஸ்சி) அதிகாரிகள் தகுதி வாய்ந்த பயனாளிகளின் பட்டியலைத் தயாரிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளனா். பயனாளிகளின் ரேஷன் மற்றும் பயோமெட்ரி விவரக் குறிப்புகளை தயாரிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.
இந்தத் திட்டம் குறித்த அறிவிக்கையை தில்லி அரசு கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், பயோமெட்ரிக் சரிபாா்ப்பிற்குப் பிறகு, தகுதியான குடும்ப அட்டைதாரா்களின் ஒவ்வொரு வீட்டிற்கும் சரியாகத் பொட்டலமிடப்பட்ட கோதுமை, மாவு மற்றும் அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருள்கள் வழங்கப்படும்.