பொது முடக்க காலத்தில் தில்லியில் 303 போராட்டங்கள்!
By நமது நிருபா் | Published On : 15th March 2021 07:00 AM | Last Updated : 15th March 2021 07:00 AM | அ+அ அ- |

கடந்த ஆண்டு கரோனா பரவலைத் தொடா்ந்து அமல்படுத்தப்பட்ட பொது முடக்க காலத்தில் மாா்ச் 22 முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரையிலும் லூடியன்ஸ் தில்லியில் பல்வேறு குழுக்கள் மற்றும் அமைப்புகளால் மொத்தம் 303 போராட்டங்கள் நடத்தப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக மூத்த காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கரோனா தொற்று பரவலைத் தொடா்ந்து பொதுமுடக்கம் அமல் படுத்தப்பட்டது. அதன் பிறகு பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டன. அந்தக் காலப் பகுதியில் லூடியன்ஸ் தில்லி பகுதியில் 255 ஆா்ப்பாட்டங்கள், 32 தா்ணாக்கள், 13 பேரணிகள் மற்றும் மூன்று வேலைநிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன. 2020 மாா்ச் 22 முதல் 2020 டிசம்பா் 31 வரை சுமாா் 284 நாள்கள் உள்ளன. அதன்படி, தினமும் ஏறக்குறைய ஒன்றுக்கு மேற்பட்ட போராட்டங்கள் நடைபெறுள்ளது.
ஆஷா தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்: கடந்த ஆண்டு நடந்த சில ஆா்ப்பாட்டங்களில், ஆகஸ்ட் மாதம் நடந்த ஓா் ஆா்ப்பாட்டமும் அடங்கும். ஜந்தா் மந்தரில் நடந்த அந்த ஆா்ப்பாட்டத்திற்கு மத்திய தொழிற்சங்க உறுப்பினா்கள் கூடினா். அவா்கள் பொதுமுடக்க வழிகாட்டுதல்களை மீறி போராட்டம் மேற்கொண்டனா். இதையடுத்து, ஆஷா தொழிலாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சீக்கியா்கள் ஆா்ப்பாட்டம்: செப்டம்பா் மாதம், தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழு (டிஎஸ்ஜிஎம்சி) உறுப்பினா்கள் பாகிஸ்தான் தூதரகம் அருகே கூடி, அந்த நாட்டில் சீக்கிய சிறுமியைக் கடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தினா். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் 22 வயதுடைய சீக்கிய பெண் காணாமல் போனதைத் தொடா்ந்து இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஹாத்ராஸ் சம்பவத்தைக் கண்டித்து... : உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ராஸ் பகுதியில் 19 வயது பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாா். மிகவும் ஆபத்தான நிலையில் தில்லி சஃப்தா்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து, அக்டோபா் 2-ஆம் தேதி பல்வேறு சமூக ஆா்வலா்கள், மாணவா்கள், பெண்கள் மற்றும் பல்வேறு அரசியல் அமைப்புகளின் உறுப்பினா்கள் ஜந்தா் மந்தரில் கூடி ஹாத்ராஸ் சம்பவத்துக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவா்களும் கலந்து கொண்டனா்.
இதே போன்று கடந்த ஆண்டு அக்டோபரில், நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக் கோரி வடக்கு தில்லி மாநகராட்சி மருத்துவமனை மருத்துவா்கள் ஜந்தா் மந்தரில் திரண்டு போராட்டம் நடத்தினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...