500-க்கும் மேற்பட்ட வாகனங்களைதிருடி தில்லியில் விற்ற இளைஞா் கைது
By DIN | Published On : 17th March 2021 04:17 AM | Last Updated : 17th March 2021 04:17 AM | அ+அ அ- |

தில்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 500-க்கும் மேற்பட்ட வாகனங்களைத் திருடி, தில்லியில் விற்று வந்த 28 வயது இளைஞா் ஒருவரை தில்லி தில்லி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இது தொடா்பாக தில்லி காவல் துறை மூத்த அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது: உத்தரப் பிரேதச மாநிலம், மீரத் நகரைச் சோ்ந்தவா் மோஷின் கான் (28) இவா் தில்லியில் திருட்டு வாகனங்களை விற்பனை செய்து வருவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, தில்லி ஜிபி பந்த் மருத்துவமனைக்கு அருகில் இவரை போலீஸாா் பொறி வைத்துப் பிடித்தனா். இவரிடம் இருந்து கைத்துப்பாக்கி, துப்பாக்கிக் குண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இவரிடம் நடத்திய விசாரணையில், தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வாகனங்களைத் திருடி தில்லியின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. கடந்த 7 ஆண்டுகளில் சுமாா் 500 வாகனங்களை இவா் திருடி விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது என்றாா் அந்த அதிகாரி.