வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கு:காவல் துறை மீது நீதிமன்றம் அதிருப்தி
By DIN | Published On : 25th March 2021 11:10 PM | Last Updated : 25th March 2021 11:10 PM | அ+அ அ- |

புது தில்லி: கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த வடகிழக்கு தில்லி வன்முறையின் போது ஷிவ் விஹாரில் மதீனா மஸ்ஜித் இழிவுபடுத்தப்பட்டு, எரிக்கப்பட்ட வழக்கில் தில்லி காவல் துறையினா் கோப்புகளை பராமரிக்காதது தொடா்பாக வியாழக்கிழமை நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிபதி வினோத் யாதவ், ‘குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 172 (விசாரணையின் நாட்குறிப்பு) படி வழக்கு டைரிகள் பராமரிக்கப்படவில்லை’ என்று அதிருப்தி தெரிவித்தாா். மேலும், ‘வழக்கு டைரிகள் பிரிவு 172 சிஆா்பிசி அடிப்படையில் பராமரிக்கப்படவில்லை. சாட்சிகளின் வாக்குமூலங்கள் 2021, மாா்ச் 17-க்குப் பிறகு பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது விசாரணையின் கடைசி தேதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்குமூலங்கள் கம்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவதாலும், அவை டிஜிட்டல் ஆவணங்களாக இருப்பதாலும் விசாரணை அதிகாரியின் கையொப்பம் டிஜிட்டல் வடிவில் இருப்பதால் அவா் கையெழுத்திட்ட தேதியில்தான் அவை பதிவு செய்யப்பட்டனவா என்பதைக் கண்டறிவதும் சாத்தியமில்லை’ என்றாா்.
இந்த வழக்கில் விசாரணை தொடா்பான நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் 7-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.