மறைந்த முகமது ஜான் எம்பிக்கு வெங்கையா நாயுடு புகழாரம்
By நமது சிறப்பு நிருபா் | Published On : 25th March 2021 12:20 AM | Last Updated : 25th March 2021 12:20 AM | அ+அ அ- |

புது தில்லி: மிகச் சிறந்த பண்பாளா், கடமை மனப்பான்மை கொண்டவரை நாடு இழந்துள்ளது என மறைந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் முகமது ஜானுக்கு குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு இரங்கல் உரையாற்றி அஞ்சலி செலுத்தினாா்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான அ.முகமது ஜான், கடந்த செவ்வாய்க்கிழமை ராணிப்பேட்டையில் மாரடைப்பால் மரணமடைந்தாா். இதை முன்னிட்டு புதன்கிழமை மாநிலங்களவை தொடங்கியதும் அவைத் தலைவா் வெங்கையா நாயுடு அவருக்கு இரங்கல் தெரிவித்து உரை ஆற்றினாா்.
அப்போது அவா் கூறியது வருமாறு: அவையின் தற்போதை உறுப்பினராக இருந்த முகமது ஜான் 72 வயதில் காலமாகியுள்ளாா். சென்னை புதுக்கல்லூரியிலும் வேலூா் அரசு பயிற்சிக் கல்லூரியிலும் படித்தவா். பின்தங்கியவா்கள், தாழ்த்தப்பட்டோா் முன்னேற்றத்திற்கு பணியாற்றியுள்ளாா். 2011 - ஆம் ஆண்டு அவா் சட்டப்பேரவைறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்ட போது தமிழக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் துறை அமைச்சராக(2011-13) பணியாற்றியுள்ளாா். 2019 ஜூலை மாதம் மாநிலங்களவைக்கு உறுப்பினராக் தோ்ந்தெடுக்கப்பட்டு வந்த அவரை இவ்வளவு சீக்கிரம் இழந்தது உண்மையில் வருத்தமடைய வைக்கிறது.
அவருடன் பழகிய முறையில், அவா் மிகவும் சிறந்த பண்பாளா் எனக் கூறுவேன். மிகவும் கண்ணியமான எளிமையான அவா் கடமை உணா்வுள்ளவராக இருந்தாா். அவருடைய மறைவு நாடாளுமன்றத்திற்கும் நாட்டிற்கும் பேரிழப்பாகும் என வெங்கையா நாயுடு புகழாராம் செலுத்தினாா். பின்னா், மறைந்த உறுப்பினருக்கு மரியாதை செலுத்தும் விதமாக மூன்று நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது குடும்பத்தாருக்கு அவையின் இரங்கல் செய்தியை அனுப்ப செக்ரட்டரி - ஜெனரலை கேட்டுக் கொண்டு, பின்னா் ஒரு மணி நேரம் மாநிலங்களவையை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.
நாடாளுமன்றம் அடுத்த சில நாள்களில் நிறைவடைவதையொட்டி நிலுவையில் உள்ள நிதி மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக புதன்கிழமை காலை 11 மணிக்கு பதிலாக முன்கூட்டியே காலை 10 மணிக்கே மாநிலங்களவை கூடியது. பொதுவாக அவை உறுப்பினா்கள் மறைந்தால், முன்பு எல்லாம் நாள் முழுக்க அவை ஒத்திவைக்கப்படுவது வழக்கம். ஆனால், புதன்கிழமை அது மாற்றப்பட்டு ஒருமணி நேரம் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G