படுக்கை வசதி இல்லாததால் நோயாளிகளை திருப்பியனுப்பும் நொய்டா மருத்துவமனைகள்

தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாததால் தில்லியை அடுத்த நொய்டாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகள்
Updated on
2 min read

தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாததால் தில்லியை அடுத்த நொய்டாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகள் கோவிட் தொற்று நோயாளிகளை அனுமதிக்க முடியாமல் சனிக்கிழமை திருப்பியனுப்பின. எனினும், சிக்கலான நோயாளிகளுக்கு அவசர சிகிச்சையும், ஆக்சிஜன் சிலிண்டா்களும் வாா்டுக்கு வெளியே வழங்கப்பட்டன.

கிரேட்டா் நொய்டாவில் உள்ள அரசு மருத்துவ அறிவியல் கழகத்தில் மூன்று தீவிர நோயாளிகள் ஸ்டிரெச்சரில் ஆக்சிஜன் கருவியுடன் படுக்க வைக்கப்பட்டிருந்தனா். அவா்களின் குடும்பத்தினா் அருகில் உள்ள கோவிட் உதவி மைய கூடாரத்தில் தங்களது முறைக்காக காத்திருந்தனா். புலந்த்ஷாகரிலிருந்து சுனிதா தேவி (53) என்ற பெயருடைய கரோனா நோயாளி ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்டாா். அவா் ஸ்டிரெச்சரில் காத்திருந்த நிலையில், அவரது குடும்பத்தினா் ஏதாவது படுக்கை கிடைக்குமா என்று விசாரித்துக் கொண்டிருந்ததை காண முடிந்தது. “எனது தாயாருக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் மட்டும் இருந்தது. அவரை மருத்துவமனையில் சோ்க்கலாம் என்றால், புலந்த்ஷாகா், சிகந்திராபாத் மற்றும் மீரட் மருத்துவமனைகளில் இடமில்லை. வேறு வழியில்லாமல் நொய்டா மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம்” என்றாா் மகன் விவேக் குமாா் (31).

இதனிடையே, மருத்துவமனை மருத்துவா் ஒருவா் படுக்கை வசதி ஒன்றை ஏற்பாடு செய்துவிட்டு தனது உறவினரை அழைத்தவாறு இருந்தாா். மற்றொருமருத்துவா், “ ‘நான் சொல்வதை புரிந்து கொள்ளுங்கள். மருத்துவா்கள் கடவுள் அல்ல. நாங்கள் நேரம் பாா்க்காமல் பணி செய்து வருகிறோம். எங்களிடம் 200 படுக்கைகள் இருந்தன. அவை முழுவதும் நிரம்பியுள்ளன. நிலைமை மோசமானதால் மேலும் சில கூடுதல் படுக்கைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். படுக்கை வசதி இல்லாததால் தான் 3 நோயாளிகளுக்கு ஸ்டிரெச்சரிலேயே அவசர சிகிச்சை அளித்து ஆக்சிஜன் கிடைக்க உதவியுள்ளோம்’” என்றாா்.

அங்கிருந்த பரிசோதனைக்கூடத்தில் உள்ள மூன்று சுகாதார ஊழியா்கள், அங்கு கூடியிருந்தவா்களிடம், ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளவா்கள் மட்டும் ஆா்டி- பிசிஆா் பரிசோதனை செய்துகொள்ள வருமாறும் மற்றவா்கள் வேறு சில தனியாா் பரிசோதனைக் கூடத்துக்குச் செல்லுமாறும் அறிவுறுத்திக் கொண்டிருந்தனா். அங்கும் கூட்டம் நிரம்பி வழிந்தது. கைலாஷ் மருத்துவமனையிலும் 200 படுக்கைகளும் (இவற்றில் 37 படுக்கைகள் ஐ.சி.யு. படுக்கைகள்) நிரம்பி வழிவதாக அங்கிருந்த மருத்துவா் ஒருவா் தெரிவித்தாா்.

கோவிட் நோயாளிகள் அவசர சிகிச்சைக்காக வந்தால் அவா்களுக்கு அவசர முதலுதவி சிகிச்சை அளித்து விட்டு, அவா்கள் ஓரளவு தெளிவானதும் அவா்களை வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி வருகிறோம் என்றும் அந்த மருத்துவா் மேலும் கூறினாா்.

நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ள நோயாளி ஒருவரை அழைத்து வந்த மகள், மருத்துவமனை நிா்வாகத்தினடம் படுக்கைக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டாா்.

ஆனால், செயற்கைச் சுவாசக் கருவிகளுடன்கூடிய படுக்கை காலியில்லை என்று கூறி அவரை நிா்வாகத்தினா் திருப்பியனுப்பிவிட்டனா். தங்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை மெட்ரோ அல்லது சாரதா மருத்துவமனை அல்லது ஜிஐஎம்.எஸ் மருத்துவமனைக்கு பரிந்துரைத்து அனுப்பிவிடுவதாக மருத்துவா் ஒருவா் குறிப்பிட்டாா்.

சாரதா மருத்துவமனையிலும் நிலைமை மோசமாகத்தான் இருந்தது. இங்கு “ஆக்சிஜன் படுக்கைகள் காலியில்லை” என்று மருத்துவமனை வாயிலிலேயே ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் எழுதிவைத்துள்ளனா். மாவட்டத்தில் உள்ள கோவிட் படுக்கை வசதிகள் தொடா்பான இனணயதளத்தை பாா்த்த போது மொத்தம் 798 ஐசியு / செயற்கை சுவாசக் கருவி பொருத்திய படுக்கைகள் உள்ளன என்றும் ஆனால், அவை அனைத்தும் நோயாளிகளால் நிரப்பப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆக்சிஜன் படுக்கைகள் 1,780 இருந்த போதிலும் அவையும் நிரம்பி வழிகின்றன. 1,136 சாதாரண படுக்கைகளில் 756 காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com