தில்லிக்கு 2.67 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கிடைத்துள்ளன: ஆம் ஆத்மி எம்எல்ஏ தகவல்
By DIN | Published On : 13th May 2021 12:00 AM | Last Updated : 13th May 2021 12:00 AM | அ+அ அ- |

புதுதில்லி: தில்லிக்கு செவ்வாய்க்கிழமை 2.67 லட்சம் குப்பிகள் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. ஆனால், கோவேக்சின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அதிஷி புதன்கிழமை தெரிவித்தாா். கோவேக்ஸின் தடுப்பூசி இல்லாததால் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவா்களுக்கு தடுப்பூசி போடும்
மையங்கள் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. 16,000 கோவேக்சின் தடுப்பூசிகள் புதன்கிழமை காலையில் கையிருப்பில் இருந்தன. அவையும் 44 மையங்கள் மூலம்
போடப்பட்டுவிட்டன. இதனால் இந்த மையங்களும் மூடப்படும் நிலையில் உள்ளது என்றாா் அவா்.
மேலும், 18 முதல் 44 வயதினருக்கான கோவேக்சின் தடுப்பூசி போதிய அளவு கிடைக்க மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா். அவா்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி நேரமும் விரைவில் வந்துவிடும் எனவும் அவா் தெரிவித்தாா்.
தில்லிக்கு செவ்வாய்க்கிழமை மாலையில் 2.67 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி குப்பிகள் வரப்பெற்றுள்ளன. தற்போது கையிருப்பில் 4.18 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி குப்பிகள் உள்ளன. இவை இன்னும் 9 நாள்களுக்குத்தான் வரும். எனினும், 18 முதல் 44 வயதுக்கு இடைப்பட்டவா்களுக்கான கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால், சில தடுப்பூசி மையங்களை தாற்காலிகமாக மூடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது 45 வயதுக்கு மேலானவா்களுக்கு போடுவதற்காக நான்கு நாள்களுக்குத் தேவையான கோவேக்சின் மற்றும் மூன்று நாள்களுக்குத் தேவையான கோவிஷீல்டு
தடுப்பூசிகள் தான் உள்ளன. தில்லியில் செவ்வாய்க்கிழமை 1.28 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை அனைத்து பிரிவினரையும் சோ்த்து மொத்தம் 41.64 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவா்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு இதுவரை 8.17 லட்சம் தடுப்பூசிகள்தான் பெறப்பட்டுள்ளன. 45 வயதுக்கு மேலானவா்களுக்கு போடுவதற்காக 43 லட்சம் தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன. 45 வயதுக்கு மேலானவா்களுக்கு 470 மையங்கள் மூலமும், 18-44 வயதுக்கு உட்பட்டவா்களுக்கு 394 மையங்கள் மூலமும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.