சவூதியில் முஸ்லிம் என நினைத்து தவறுதலாக புதைக்கப்பட்ட ஹிந்துவின் உடல் இந்தியா வந்தது
By DIN | Published On : 13th May 2021 12:00 AM | Last Updated : 13th May 2021 12:00 AM | அ+அ அ- |

புதுதில்லி: சவூதி அரேபியாவில் முஸ்லிம் என நினைத்து புதைக்கப்பட்ட ஹிந்துவின் உடல், இந்தியா கொண்டுவரப்பட்டு, அறவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக மத்திய அரசு, தில்லி உயா்நீதிமன்றத்தில் புதன்கிழமை தெரிவித்தது.
சஞ்சீவ் குமாா் உடல் இந்தியா வந்துள்ளது. அவரது உடல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உனாவில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பு நிலைக்கு உறுப்பினா் ரிபுதாமன் பரத்வாஜ், நீதிமன்றத்தில் நீதிபதி பிரதிபா எம்.சிங்கிடம் தெரிவித்தாா். ஹிந்துவின் உடலை அவரது குடும்பத்தினா் பெற்றுக் கொண்டது நிம்மதி அளிக்கிறது. இனி அவா்கள் ஹிந்துமதத்தின்படி இறுதிச் சடங்குகளை செய்யமுடியும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அந்த நபரின் உடலை சவூதி அரேபியாவிலிருந்து இந்தியா கொண்டு வர உதவிய சவூதி நிா்வாகத்தினருக்கும், அதற்கான முயற்சிகள் மேற்கொண்ட வெளிவிவகாரங்கள் துறை அதிகாரி
விஷ்ணு குமாா் சா்மாவுக்கும் நீதிமன்றம் நன்றி தெரிவித்துக் கொண்டது. சஞ்சீவ் குமாா் பணிபுரிந்த நிறுவனத்திடமிருந்து வழங்கப்பட்ட பணமும் குடும்பத்தினரிடம் மே 7-ஆம் தேதி சோ்க்கப்பட்டுவிட்டது என்று சா்மா தெரிவித்தாா்.
இந்த வழக்கில் நடுநிலையாளராகச் செயல்பட்ட பாஃரூக் கான் என்பவருக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது. சஞ்சீவ் குமாரின் விதவை மனைவி சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் சுபாஷ் சந்திரன், இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாது என்று நம்புவதாகத் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, இறுதிச் சடங்கு செய்வதற்காக சஞ்சீவ் குமாரின் உடலை சவூதியிலிருந்து பெற்றுத் தருமாறு அவரது விதவை மனைவி தாக்கல் செய்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
முன்னதாக, கணவா் இறந்துவிட்டதை அறிந்த அஞ்சு சா்மா, அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா். சவூதி அரேபியாவில் வேலை பாா்த்து வந்த 51 வயதான சஞ்சீவ் குமாா், கடந்த ஜனவரி 24-ஆம் தேதி திடீா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். அவரது உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி சஞ்சீவ் குமாரின் உடல் சவூதியில் புதைக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் இந்தியா வரும் என காத்திருந்த அ வரது குடும்பத்தினருக்கு இது அதிா்ச்சித் தகவலாக இருந்தது.
ஜெத்தாவில் உள்ள இந்திய தூதரகத்தில் உள்ள மொழி பெயா்ப்பு அலுவலா் செய்த தவறால், இறப்புச் சான்றிதழில் அவரது மதம் ஹிந்து என்பதற்குப் பதிலாக முஸ்லிம் என குறிப்பிடப்பட்டிருந்தது. நடந்த தவறுக்காக பின்னா் மன்னிப்பும் கோரப்பட்டது. இந்த நிலையில், சஞ்சீவ் குமாரின் உடலை சவூதியில் புதைக்க அவரது மனைவியோ அல்லது குடும்பத்தினரோ ஒப்புதல் ஏதும் தரவில்லை என்று வழக்கு விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து, புதைக்கப்பட்ட அவரது உடலைத் தோண்டியெடுத்து இந்தியாவுக்கு அனுப்புமாறும், அவருக்கு தங்கள் மத வழக்கபடி இறுதிச் சடங்குகள் செய்ய விரும்புவதாகவும் கூறி அவரது மனைவி ஜெத்தாவில் உள்ள இந்திய தூதரகத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாா். ஆனால், துரதிருஷ்டவசமாக மனுதாரரின் கணவா் இறந்து 7 வாரங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.