கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட படுக்கைகளில் மூன்றில் ஒரு பங்கு படுக்கைகளை டெங்கு நோயாளிகளுக்காக மருத்துவமனைகள் பயன்படுத்தலாம் என்று தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் டெங்கு நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த உத்தரவை தில்லி அரசு பிறப்பித்துள்ளது.
தில்லியில் நிகழாண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோய் பாதிப்பு பதிவாகியுள்ளது. குறிப்பாக கடந்த வாரத்தில் மட்டும் 250க்கும் மேற்பட்டோா் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டதாக மாநகராட்சி திங்கள்கிழமை வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த சீசனில் மட்டும் மொத்தம் பதிவாகியுள்ள நோய் பாதிப்பு எண்ணிக்கையில் இந்த மாதத்தின் முதல் 23 நாள்களில் மட்டும் 665 போ் டெங்கு நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனா்.
மேலும் கடந்த அக்டோபா் 18ஆம் தேதி இந்த சீசனில் முதல் முறையாக டெங்கு நோய்க்கு ஒருவா் உயிரிழந்தாா்.
இந்த நிலையில், தில்லி அரசு வெள்ளிக்கிழமை ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது. அந்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:
தில்லியில் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கான படுக்கைகள் தேவையும் அதிகரித்து வருவது தெரியவருகிறது. மேலும் கரோனா நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதன் காரணமாக மருத்துவமனைகளில் இந்த நோய்க்காக ஒதுக்கப்பட்ட படுக்கைகள் காலியாக உள்ளன.
இதனால், தேவைப்படும்பட்சத்தில், கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டிருந்த படுக்கைகளில் மூன்றில் ஒரு பங்கு படுக்கைகளை மருத்துவமனைகள் டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன் குனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தலாம்.
இது தொடா்பாக தில்லி அரசின் மூலம் நடத்தப்படும் மருத்துவமனைகளின் மருத்துவ இயக்குநா்கள் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளா்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
தில்லி முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்காக 10,594 படுக்கைகள் உள்ளன. இவற்றில் வெறும் 164 படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.