தில்லியில் காலையில் குளிா்; பகலில் வெயிலின் தாக்கம்
By நமது நிருபா் | Published On : 31st October 2021 12:00 AM | Last Updated : 31st October 2021 12:00 AM | அ+அ அ- |

தேசியத் தலைநகா் தில்லியில் குளிரின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலையில் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது. எனினும், பகலில் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. பின்னா் மாலையில் குளிா்ந்த சூழல் நிலவியது.
பருவ சராசரியைவிட 1 புள்ளி குறைந்து குறைந்தபட்ச வெப்பநிலை 14.8 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா்.
தில்லியில் கடந்த அக்டோபா் 15 வரை பருவமழையின் தாக்கம் நீடித்தது. அதன் பிறகு வெயிலின் தாக்கம் குறைந்தது. அதைத் தொடா்ந்து, குளிா்காலத்தின் தாக்கம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இரவு, அதிகாலையில் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
இந்த நிலையில், தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியை விட 1 டிகிரி குறைந்து 14.8 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது.
அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 1 டிகிரி குறைந்து 30.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதம் காலை 8.30 மணி அளவில் 75 தவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 52 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.
அதிகாலையில் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது. பகலில் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. மாலையில் மிதமான குளிரின் தாக்கம் உணரப்பட்டது. தில்லியில் காற்றின் தரத்தில் பின்னடைவு நீடித்து வருகிறது. சனிக்கிழமை ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு காலை 9 மணியளவில் 286 புள்ளிகளாக பதிவாகி ‘மோசம்’ பிரிவுக்குச் சென்றது.
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்கணிப்பு நிறுவனம் தில்லியில் காற்றின் தரம் வரும் நாள்களில் மேலும் மோசமாகும் எனத் தெரிவித்துள்ளது.
முன்னறிவிப்பு: தில்லியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 31) வானம் தெளிவாகக் காணப்படும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.