சுயநிதிக் குழு பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருவாய் கிடைக்கும் திட்டம்
By நமது சிறப்பு நிருபா் | Published On : 31st October 2021 12:00 AM | Last Updated : 31st October 2021 08:38 AM | அ+அ அ- |

கிராமப்புற பெண்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 1 லட்சம் வரை வருவாய் கிட்டும் அளவிற்கான முயற்சிகளை மத்திய ஊரக வளா்ச்சித்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
குடும்பநிலையில் வாழ்வாதார நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரண்டரைக் கோடி சுயஉதவிக் குழு பெண்களுக்கு உதவிகள் வழங்கப்படும் எனவும் மத்திய ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்த அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ள விவரம் வருமாறு:
பெண்களை உயா் பொருளாதார நிலைக்கு கொண்டு செல்வதில் தீவிர கவனம் செலுத்துவதற்காக, கிராமப்புற சுய உதவிக்குழு பெண்கள் ஆண்டுக்கு குறைந்தது ரூ.1 லட்சம் வரை வருவாயை ஈடக்கூடிய முயற்சியை ஊரக வளா்ச்சி அமைச்சகம் தொடங்கியுள்ளது.
தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தீவிர பிரசார அணுகுமுறையால் 6,768 வட்டங்களில் (பிளாக்கள்) இன்றுவரை, 7.7 கோடி பெண்களைத் திரட்டி 70 லட்சம் சுய உதவிக்குழுக்களில் இணைக்கப்பட்டுள்ளனா்.
முதற்கட்டமாக கிராமப் பெண்கள் ஆண்டுக்கு 1 லட்சம் வருவாய்க்கான இலக்கை அடைவதற்காக, அடுத்த 2 ஆண்டுகளில் 2- 1/2 கோடி (25 மில்லியன்) கிராமப்புற சுய உதவிக் குழுக்களுக்கு வாழ்வாதார ஆதரவை வழங்க ஊரக வளா்ச்சி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, மாற்றத்தக்க ஊரக இந்திய அறக்கட்டளை (டிரான்ஸ்ஃபாா்மேஷன் ரூரல் இந்தியா ஃபவுண்டேஷன்) ஆகிய அமைப்புகள் பங்கெடுத்துள்ளன. இந்த திட்டம் குறித்து கடந்த ஆக்.28 ஆம் தேதி கலந்தாய்வு நடந்தது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு வகையான மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, முடிவாக மாநில அரசுகளுக்கு விரிவாக சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி விவசாயம் மற்றும் அதன் சாா்புடையவைகள், கால்நடைகள், என்.டி.எஃப்.பி. என்கிற மரம் அல்லாத வனப் பொருட்கள் மற்ற பிற குடும்பரீதியான வாழ்வாதார (குடும்ப தொழிலில்) நடவடிக்கைகளை இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு வருவாய் ஏற்படுத்தப்படும். இவைகளின் அடிப்படையில் சுயஉதவிக்குழுவில் இடம் பெற்றுள்ள கிராமப் பெண்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வரை வருமானம் கிடைக்க முயற்சிக்கப்படுகிறது.
சுயநிதிக்குழுகள் மட்டுமின்றி, கிராம அமைப்புகள், கிளஸ்டா் அளவிலான கூட்டமைப்புகள் ஆகியவைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் மாநிலங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்ற சுயஉதவிக்குழு உறுப்பினா்கள், சிவில் சொசைட்டி அமைப்புகள், கே.வி.கே. க்கள் (கிருஷி விக்யான் கேந்திரங்கள்) மற்றும் பிற தனியாா் வணிக நிறுவனங்கள் இத் திட்டத்தில் பங்கு பெற்று உதவிகளையும் பயிற்சிகளையும் அளிப்பது முக்கியமானது. இலக்கை அடைவதற்கு இந்த துறையினரை ஊக்குவித்து ஒருங்கிணைப்பை உருவாக்கவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த சுய உதவிக்குழுக்களுக்கு ஆரம்ப மூலதன ஆதரவை மத்திய அரசு வழங்குகிறது . ஆண்டுக்கு ரூ. 80 ஆயிரம் கோடி இந்த சுய உதவிக்குழுக்கள் கணக்கில் வைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், பல்வேறு வகுப்பினரைச் (ஜாதி) சோ்ந்த சுய உதவிக் குழுக்கள் அல்லது கூட்டமைப்புகளில் உறுப்பினா்களாக உள்ள தங்கள் ஏழைப் பெண்களின் வருமானம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் நிதி, பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுச் சேவைகள் வழங்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக வங்கிக் கடன்களை மட்டும் பெற்ற சுய உதவிக்குழுக்களுக்கு தற்போது பல்வகைப்பட்ட வாழ்வாதார வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் அனைத்தும் நோ்மறையான மாற்றத்தை அளிக்கும் என ஊரக வளா்ச்சித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.