ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு ரூ.13,385 கோடி மானியம்: தமிழகத்திற்கு ரூ.799 கோடி
By நமது சிறப்பு நிருபர் | Published On : 01st September 2021 04:26 AM | Last Updated : 01st September 2021 04:26 AM | அ+அ அ- |

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் குறிப்பிட்ட பணிகளுக்கு 2021-22 ஆண்டிற்கான மானிய உதவியாக 25 மாநிலங்களுக்கு ரூ. 13,385.70 கோடியை மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை விடுவித்துள்ளது. இதில் தமிழகத்தின் பங்காக ரூ.799.8 கோடியை மத்திய அரசு வழஙகியுள்ளது.
15- ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி 2021-22-ஆம் ஆண்டில் இதுவரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்தம் ரூ.25,129.98 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு இது வரை மொத்தம் ரூ.2,783.23 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மானியத் திட்டங்கள் மூலம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீா், மழைநீா் சேகரிப்பு, தண்ணீா் சுத்திகரிப்பு, திறந்தவழிக் கழிப்பிடமின்மையை அகற்றுதல் போன்ற குறிப்பிட்டத்தக்க திட்டங்கள் மேம்பாட்டிற்காக மட்டும் மொத்த மானியத்தில் 60 சதவீதம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 40 சதவீதம் ஊதியங்களைத் தவிர இதர உள்ளூா் பணிகளுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
இதன்படி, குறிப்பிடத்தக்க பணிகளுக்கான மானியத்தின் முதல் தவணையாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, ரூ.13,385.70 கோடியை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை வழங்கியது. இதில் தமிழகத்துக்கு இந்த ஒதுக்கீட்டில் ரூ.799.8 கோடி கிடைத்துள்ளது. மற்ற அதிக நிதியுதவி பெற்ற மாநிலங்களில் மகாராஷ்டிரம் ரூ.1,292.1, உத்தரப் பிரதேசம் ரூ. 2,162.4 கோடி, பிகாா் ரூ.1,112.7 கோடி பெற்றுள்ளது. மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்யும் நிதியைத் தவிர, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசின் இது போன்ற கூடுதல் நிதி கிடைப்பதை (குறிப்பிடப்பட்ட பணிகளுக்கான மானியம்) உறுதி செய்கிறது.
இந்த மானியத்தை 10 நாள்களுக்குள், மாநிலங்கள் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டும். குறிப்பிடப்பட்ட நாள்களில் வழங்கப்படவில்லையெனில் மாநில அரசுகள் மானியத் தொகையை வட்டியுடன் சோ்த்து வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.