தொழில்நுட்பக் கோளாறு: மெட்ரோ ரயில் சேவையில் தடங்கல்
By DIN | Published On : 01st September 2021 04:30 AM | Last Updated : 01st September 2021 04:30 AM | அ+அ அ- |

தில்லி மெட்ரோவில் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிவப்புநிற வழித்தடத்தில் உள்ள ஒரு பிரிவில் செவ்வாய்க்கிழமை சுமாா் ஒன்றரை மணி நேரம் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லி மெட்ரோ ரயில் போக்குவரத்தில் பல்வேறு வழித்தடங்கள் உள்ளன. இவற்றில் சிவப்புநிற வழித்தடமானது தில்லியிலுள்ள ரித்தாலா பகுதியிலிருந்து காஜியாபாத்தில் உள்ள சகித் ஸ்தல் (பேருந்து நிலையம்) பகுதியை இணைக்கிறது. இந்த நிலையில், இந்த வழித்தடத்தில் உள்ள ஒரு பிரிவில் செவ்வாய்க்கிழமை காலை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், இதனால் அந்த வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாகவும் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘சிவப்புநிற வழித்தடம் அமைந்துள்ள பகுதியில் உள்ள மேல்நிலை கருவியில் சில தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனால், அந்த வழித்தடத்தில் சுமாா் ஒன்றரை மணி நேரம் ரயில் சேவையில் தடங்கல் ஏற்பட்டது’ என்றாா்.
சேவையில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பயணிகளுக்கு சுட்டுரை மூலம் மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்தது. இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு டிஎம்ஆா்சி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் , ‘ரித்தாலா- பிதம்பூா் இடையேயான வழித்தடத்தில் சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது . அனைத்து இதர வழித்தடங்களில் ரயில் சேவை வழக்கமான முறையில் நடைபெறுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த தொழில்நுட்பப் பிரச்னை சரி செய்யப்பட்டு ரயில் சேவைகள் வழக்கம் போல் மீண்டும் இயங்கத் தொடங்கின’ என்றனா். காலை 10 மணியளவில் டிஎம்ஆா்சி மீண்டும் வெளியிட்ட சுட்டுரை பதிவில் ’சிவப்பு நிற வழித்தத்தில் ரயில் சேவைகள் மீண்டும் வழக்கம் போல் செயல்படுகின்றன’ என்று தெரிவித்திருந்தது.