தில்லி நரேலா பகுதியில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் 13 வயது தலித் சிறுமியின் பெற்றோரை தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் தலைமையிலான பிரதிநிதிகள் குழு செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்தது. அப்போது பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு பாதுகாப்பு மற்றும் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று தில்லி அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தியது.
இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரின்படி, சம்பந்தப்பட்ட 13 வயது சிறுமியின் தந்தை கூறுகையில், கடந்த மாதம் குருகிராமில் உள்ள தனது சகோதரனுடைய வீட்டுக்கு, தனது மகளை தான் வசிக்கும் வீட்டு உரிமையாளரின் மனைவி அழைத்துச் சென்ாகவும், இந்த நிலையில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி தனது மகள் இறந்து விட்டதாகதி தனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தாா். சிறுமி இறந்த பிறகு அவரது உடல் நரேலா பகுதிக்கு தகனத்திற்கு கொண்டு வரப்பட்டது. எனினும், இந்த விவகாரம் தொடா்பாக சிறுமியின் தந்தைக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவா் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்தாா்.
இது தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதனிடையே சம்பந்தப்பட்ட அந்தச் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இந்த நிலையில், தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் தலைமையிலான அந்தக் கட்சியின் பிரதிநிதிகள் குழு நரேலாவில் உள்ள சிவ் விஹாா் பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரின் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்று சந்தித்தனா்.
இதன் பிறகு அனில் குமாா் கூறுகையில், ‘ பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளனா். தங்களது 3 இதர குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் கவலை அடைந்துள்ளனா். இந்தச் சம்பவம் மிகவும் மனிதத் தன்மையில்லாத சம்பவமாகும். குற்றவாளிகளைத் தண்டிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற கொடூர குற்றங்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனடியாக நிதியுதவி அளிக்க தில்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா்களின் உடனடித் தேவைகளை உள்ளூா் காங்கிரஸ் தொண்டா்கள் கவனித்து வருகின்றனா். அந்தச் சிறுமி பாதிக்கப்பட்ட சம்பவத்திற்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை. கேஜரிவால் அரசு மற்றும் மத்திய அரசின் அழுத்தம் காரணமாக இது நிகழ்ந்திருக்கும்’ என்றாா்.
அனில் குமாருடன் மூத்த காங்கிரஸ் தலைவா்கள் உதித் ராஜ், ஜெய்கிஷன், ராஜேஷ் லிலோதியா, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா்கள் ஆகியோா் உடன் சென்றனா்.