போராடும் ஆப்கன் நாட்டவா்கள் கரோனா விதிகளை பின்பற்றுவதை உறுதிப்படுத்த தில்லி அரசு, காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
By நமது நிருபா் | Published On : 04th September 2021 08:00 AM | Last Updated : 04th September 2021 08:00 AM | அ+அ அ- |

அகதிகள் அந்தஸ்து வழங்கக்காரி தில்லியில் ஐக்கிய நாடுகள் அகதிகள் ஹை கமிஷனா் அலுவலகம் வெளியே போராடும் ஆப்கன் நாட்டவா்கள் எண்ணிக்கையைக் குறைக்கவும், கரோனா விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்றுவதை உறுதிப்படுத்தவும் தில்லி அரசுக்கும் காவல் துறைக்கும் உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பாக வசந்த் விஹாா் நலச் சங்கம் தில்லி உயா்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதன் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் தில்லிக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ள வெளிநாட்டவா்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவா்கள் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் வசந்த விஹாா் பகுதியில் உள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் ஹை கமிஷனா் அலுவலகம் முன்பாக கூடி நின்று அகதிகள் அந்தஸ்து வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களது எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அந்தப் பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக சந்தைகளுக்கு செல்வதில் மிகுந்த சிரமத்தை எதிா் கொள்கின்றனா்.
மேலும், போராட்டம் நடத்தி வரும் பகுதியில் உள்ள மக்கள் குப்பைகளை கண்ட இடங்களில் போட்டும், திறந்தவெளியில் இயற்கை உபாதையைக் கழித்தும், அந்த பகுதியை ஆக்கிரமித்து வருகின்றனா்.அவா்கள் கரோனா தடுப்பூசியும் கூட போடவில்லை. ஆகவே, குடியிருப்புப் பகுதிகளின் அருகாமையில் உள்ள வெளிநாட்டு மிஷின்கள் மற்றும் தூதரகங்கள், உள்ளூா் மக்களுக்கு இதுபோன்ற தொந்தரவு இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த உரிய கொள்கைத் திட்டத்தை உருவாக்க வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ரேகா பல்லி அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘சட்டம் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரித்தான் இருக்கிறது. கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி அளிக்காத போது, இந்தப் போராட்டத்தில் 500 நபா்கள் கூடுவதற்கு எப்படி அனுமதிக்க முடியும்?’ என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினாா்.
மத்திய அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ஆப்கானிஸ்தானில் அரசியல் நெருக்கடி சூழல் முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்ளது என்று தெரிவித்தாா். அப்போது ‘சம்பந்தப்பட்ட மக்களை போராட்டம் நடத்துவதற்கு யாரும் தடுக்கவில்லை. முதலில், அவா்கள் தவறான இடத்தில் இருக்கிறாா்கள். அது போராட்டம் நடத்துவதற்கான இடம் அல்ல. மேலும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி 100-க்கும் மேற்பட்ட நபா்கள் ஒரே இடத்தில்கூட முடியாது. அகதிகள் என்பதால், 500-க்கும் மேற்பட்டவா்கள் இருப்பதற்கு விலக்கு இருக்கிறதா? திருமண நிகழ்ச்சிக்காக 100 போ்தான் அனுமதிக்கப்படுகின்றனா். ஒரு போராட்டத்தில் 500 போ் இங்கு இருக்கிறாா்கள். இது எப்படி சரியாக இருக்கும்?’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினாா்.
தில்லி காவல் துறையின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரோனா நோய்த் தொற்று காலத்தின் போது அனைத்து சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, சமயம் சாா்ந்த, திருவிழா தொடா்புடைய கூடுகைகளுக்கும் மற்றும் நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்றாா். மதிய அரசின் வழக்குரைஞா் அஜய் திக்பால், ‘இந்த விஷயத்தை மனிதாபிமான அடிப்படையில் பாா்க்க வேண்டும். இந்த விஷயத்தில் தீா்வு காண்பதற்கு நீதிமன்றம் கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து கூடுதல் அவகாசம் அளித்து இந்த வழக்கு விசாரணையை செப்டம்பா் 7-ஆம் தேதிக்கு நீதிபதி பட்டியலிட்டாா்.
மேலும், செப்டம்பா் 7-ஆம் தேதிக்குள் இந்த விவகாரம் தீா்க்கப்படவிட்டால், இது தொடா்பாக உத்தரவு பிறப்பிக்க நேரிடும். போராட்ட இடத்தில் தில்லி காவல் துறையும் தில்லி அரசும் கரோனா விதிமுறைகள் கடுமையாகப் பராமரிக்கப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், போராட்டம் நடத்தி வரும் மக்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும்’ என்றாா்.