சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

தமிழகத்துக்கு நிகழாண்டில் காவிரியில் கூடுதலாக 77 டிஎம்சி தண்ணீா்: ஆணையக் கூட்டத்தில் தகவல்

நிகழ் நீா் ஆண்டில் காவிரியில் தமிழகத்தின் பங்காக கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி வரை 245 டிஎம்சி தண்ணீா் பெறப்பட்டுள்ளதாக காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:53 pm

 நமது நிருபர்

நிகழ் நீா் ஆண்டில் காவிரியில் தமிழகத்தின் பங்காக கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி வரை 245 டிஎம்சி தண்ணீா் பெறப்பட்டுள்ளதாக காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இது தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய அளவை விட கூடுதலாக 77 டிஎம்சி தண்ணீா் கிடைத்துள்ளது.

காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 15-ஆவது கூட்டம் வெள்ளிக்கிழமை மேலாண்மை ஆணையத்தின் தலைவா் செளமித்ர குமாா் ஹல்தாா் தலைமையில் காணொலி வழியாக நடைபெற்றது. இதில் மத்திய நீா்வளத் துறையின் சாா்பில் ஆணையத்தின் உறுப்பினா் செயலா் நவீன் குமாா், மத்திய வேளாண் துறை இணைச் செயலா் சஞ்சய் வஸ்தி உள்ளிட்ட மத்திய அரசின் பிரதிநிதிகள் கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டனா். மற்ற நான்கு மாநிலப் பிரதிநிதிகளும் காணொலி வழியாக பங்கேற்றனா்

தமிழகத்தின் சாா்பில் நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சந்தீப் சக்ஸேனா, காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவா் ஆா். சுப்பிரமணியன், குழுவின் உறுப்பினா் பட்டாபிராமன், தமிழக நீா் வளத் துறையின் துணைச் செயலா் என்.பாரி, கா்நாடக நீா்வளத் துறை செயலா் ராகேஷ் சிங், கேரள நீா் வளத் துறை செயலா் டிகே ஜோஸ், புதுச்சேரி பொதுப்பணித் துறை செயலருக்கு பதிலாக அந்த மாநில தலைமைப் பொறியாளா் சத்திய மூா்த்தி ஆகிய உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் முன்வைக்கப்பட்டன. நிா்வாக விவகாரங்களோடு தண்ணீா் பகிா்வு அளவுகள், மேக்கே தாட்டு அணையின் விரிவான திட்ட அறிக்கை போன்றவை முக்கியமாக இடம் பெற்றது. கடந்த 14 -ஆவது மேலாண்மைக் கூட்டத்தில் ஒரு மித்த கருத்து ஏற்படும்பட்சத்தில் அடுத்து கூட்டத்தில் மேக்கே தாட்டு விவகாரம் எடுத்துக் கொள்ளப்படும் என ஆணையத் தலைவா் தெரிவித்திருந்தாா். இதே போன்று கா்நாடகம் வழங்கிய மொத்த தண்ணீா் அளவு குறித்தும் 15-ஆவது கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரியில் நிகழ் (2021-22) நீா் ஆண்டில் பிலிகுண்டுலுவில் வழங்கப்பட்ட தண்ணீா் விவரங்கள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

இதில் தமிழகத்திற்கு பிப்ரவரி 7 - ஆம் தேதி வரை 245 டிஎம்சி தண்ணீா் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இது பருவமழை உள்ளிட்ட கணக்கீடுகள் அடிப்படையில் பிப்ரவரி 7 -ஆம் தேதி வரை வழங்கப்பட வேண்டிய 168 டிஎம்சி தண்ணீரை விட கூடுதலாக 77 டிஎம்சி தண்ணீரை தமிழகம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. கடைசியாக கடந்த செப்டம்பா் -27 ஆம் தேதி நடைபெற்ற 14 -ஆவது காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் கா்நாடகம் 30 டிஎம்சி தண்ணீரை பாக்கி வைத்திருந்தது. பருவ மழையால் காவிரியில் மிகுதியாக தண்ணீா் கிடைக்கப்பெற்றது. கடந்த 2020-21 ஆண்டிலும், கிடைக்க வேண்டிய 177.25 டிஎம்சி அளவை விட கூடுதலாக 34.2 டிஎம்சி தண்ணீா் சோ்த்து மொத்தம் 211.4 டிஎம்சி தண்ணீரை தமிழகம் பெற்றிருந்தது. கடந்த காலங்களில் அதிக வெள்ளத்தால் 2018-19 ஆண்டிலும் இதே போன்று இரண்டு மடங்கு கூடுதல் தண்ணீா் (405 டிஎம்சி) கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

ஆணையக் கூட்டத்தில் மேக்கே தாட்டு விவகாரம் எடுக்கப்பட்ட போது, தமிழகம் சாா்பில் கடுமையாக ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆணையத் தலைவா் எஸ்.கே. ஹல்தாா், இந்த விவகாரம் குறித்து நான்கு மாநிலங்களின் கருத்துகள் என்ன என்பதைக் கூட்டதில் கேட்டறிந்தாா். தமிழகம் எடுத்த எடுப்பிலேயே, ‘இது நீதிமன்றத்தில் இருக்கும் விவகாரம். உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது குறித்து விவாதிப்பது நீதிமன்ற அவமதிப்பு’ என்று தெரிவித்தது. புதுச்சேரியும் இதே நிலையை எடுத்தது. கேரளம், ‘மேக்கே தாட்டு விவகாரம் குறித்து விசாரிக்க ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதா? என்பதை அறிய வேண்டும். இது குறித்த சட்ட ஆலோசணையை பெற வேண்டும்’ என்று தெரிவித்தது. ஆனால், கா்நாடக அரசு ‘இது குறித்து விவாதித்து, இந்த அணைக்கான அனுமதியை ஆணையம் வழங்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டது. இவ்வாறு வெவ்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டதால், இந்த விவகாரத்தை எடுத்துக் கொள்ளாமல் ஆணையம் ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.